புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொலைப்பேசி வாயிலாக உறுதியளித்தால் போராட்டம் வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிப்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான தர்ணா போராட்டம் மூன்றாவது நாளாக இன்று நீடித்து வருகிறது. போராட்டத்திற்கு இடையில் இன்று செய்தியாளர்களிடன் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவிக்கையில்.,
புதுவை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள்முதல் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து வருகிறார். முதியோர் உதவிதொகை, இலவச அரிசி, விவசாயிகளுக்கான கடன் ரத்து என மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றார். காங்கிரஸ் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றார். அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் செயல்பட்டு வருகின்றார்.
Day 3 - #dharna continues at #Puducherry by HCM @VNarayanasami , Hon'ble Ministers & MLAs infront of #RajNivas #Puducherry against @LGov_Puducherry @thekiranbedi for her undemocratic day-to-day governance in Puducherry. pic.twitter.com/QMH0a4IH7t
— CMO Puducherry (@CMPuducherry) February 15, 2019
பிரதமர் மோடிக்கு புதுவையில் ஒரு தம்பி இருக்கின்றார், அவர்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி. பிரதமர் மோடி, ஆளுநர் கிரண்பேடி, எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி ஆகியோர் சேர்ந்து கூட்டு சதி செய்கின்றனர்.
மாநில வளர்ச்சியும், மக்கள் நலனும்தான் எங்களுக்கு முக்கியம். இதற்காகத்தான் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மூன்றாவது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய இந்த விவகாரத்தை வேண்டுமென்றே கிரண்பேடி தாமதப்படுத்துகிறார். எங்களின் போராட்டம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அறவழியில் தொடர்கிறது.
பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவன தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை, துறைகளுக்கான மானியம், மக்கள் நலத்திட்டங்களுக்காக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது.
போராட்டம் குறித்து எங்களின் கூட்டணி கட்சிகள், ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் இங்கே வந்துதான் உறுதி சொல்ல வேண்டும் என்பது இல்லை. தொலைபேசியில் உறுதி அளித்தால் கூட எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிப்போம் என தெரிவித்துள்ளார்.