உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னைக்கு வாய்ப்பில்லை

Last Updated : May 3, 2017, 01:43 PM IST
உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னைக்கு வாய்ப்பில்லை title=

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில் அது குறித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:- 

தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறது. உள்மாவட்டங்களை பொறுத்த வரை மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்துள்ளது. இதன் காரணமாக வெப்பநிலையானது, தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இயல்பிலிருந்து, 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. உள்மாவட்டங்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இது அடுத்த 3 நாட்களுக்கு தொடரும்.

அதாவது கடற்கரை பகுதிகளில் காற்றின் திசை காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை குறைவாக இருக்கும். இதற்கு மாறாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரித்து காணப்படும்

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை, செங்கோட்டையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை மழைக்கு வாய்ப்பில்லை. வறண்ட சூழ்நிலையையே நிலவும்" என்றார்.

Trending News