ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு ஆபத்து: டிடிவி தினகரன்

அரசு நிர்வாகத்தில் நடப்பவற்றை பொதுமக்களும் தெரிந்து கொள்ள உதவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2019, 04:09 PM IST
ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு ஆபத்து: டிடிவி தினகரன் title=

சென்னை: தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா மூலம் அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவியும் நிலை ஏற்படும். இதனால் ஜனநாயகத்திற்கு ஆபத்தாகி விடும் என அமமுக கட்சின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

அதுக்குறித்து அவர் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

அரசு நிர்வாகத்தில் நடப்பவற்றை பொதுமக்களும் தெரிந்து கொள்ள உதவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து அதனை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

ஜனநாயக நாட்டில் சாதாரண குடிமகனுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அரசு நிர்வாகத்திற்கும் சாமான்யர்களுக்கும் இணைப்புப் பாலமாக, ஆட்சியாளர்கள் தங்களது தவறுகளைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக ஆர்.டி.ஐ. சட்டம் திகழ்ந்தது. 

ஆனால், இச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தேசிய தகவல் ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக முழுமையாக செயல்படாத நிலையில் இருந்தது. தற்போது அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்யும் வகையில் மத்திய அரசு ஆர்.டி.ஐ.சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையர், ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு இணையாக தேசிய தகவல் ஆணையருக்கு இருந்த தகுதியும் அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளன. தன்னாட்சி பெற்ற அமைப்பான தேசிய தகவல் ஆணையம் தனது வலிமையை முற்றிலுமாக இழக்கிறது. 

மேலும் தேசிய தகவல் ஆணையர், மாநில தகவல் ஆணையர்கள் ஆகியோரின் ஊதியங்களையும் இனி மத்திய அரசுதான் நிர்ணயிக்கும் என்கிற திருத்தத்தின் மூலம் தகவல் ஆணையத்தை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் அமைப்பாக மாற்ற முயற்சிக்கிறது. மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து மத்திய அரசு இதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

அரசியல் சாசனத்தைத் தூக்கிப்பிடித்து காப்பாற்றிக் கொண்டிருக்கிற தன்னாட்சி அமைப்புகளை எல்லாம் இப்படி வீழ்த்தி, மத்திய அரசு தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு பேராபத்தாக முடித்துவிடும். அதிகாரங்கள் மொத்தமும் ஒற்றைப்புள்ளியில் குவிவது நாட்டிற்கு, அதன் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்து, நிறைவேற்றவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Trending News