ஆளுங்கட்சி அராஜகம் : கமல்ஹாசன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அராஜகம் ஆரம்பம் ஆகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் குற்றம் சாட்டியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2021, 07:10 PM IST
  • தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
  • வேட்பாளர்கள் மிரட்டப்படுவது, அச்சுறுத்தி வாபஸ் வாங்கவைப்பது போன்ற செயல்களைத் தடுக்க மாநில தேர்தல் ஆணையம் தவறிவிட்டது - மக்கள் நீதி மய்யம்.
ஆளுங்கட்சி அராஜகம் : கமல்ஹாசன் குற்றச்சாட்டு title=

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சிகளுக்கு இடையில், குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் தொடங்கி விட்டன. 

இந்த நிலயில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அராஜகம் ஆரம்பம் ஆகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் பட்டியலின வேட்பாளரை அச்சுறுத்தி வாபஸ் வாங்கவைத்த அராஜகத்திற்கு, 
மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
   
தமிழகத்தில்  9 மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சித் தேர்தல் (Local Body Elections) அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதனோடு காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  தேர்தல் நடக்கவுள்ளது. இதில், சேலம் மாவட்டம்  பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வார்டு எண் 9-ல் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில், உள்ளூரில் உள்ள தி.மு.க முக்கியப் பிரமுகர் விடுத்த கடும் மிரட்டல் காரணமாகவே, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தனது வேட்புமனுவை நேற்று (24-09-2021) வாபஸ் பெற்றுள்ளார்.

பட்டியலினத்தைச் சேர்ந்தவரும், ஆட்டோ தொழிலாளியுமான ம.நீ.ம வேட்பாளர், ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்கு எதிராகப்  புகார் கொடுத்தால் தனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் வருமோ என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ளார்.

ALSO READ: கூவம் ஆற்றில் மணல் கடத்தல்! கமல்ஹாசன் காட்டமான அறிக்கை

இது அப்பட்டமான ஜனநாயக விரோதப்போக்கு. சட்டத்தின் ஆட்சிதான் இங்கே நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு வலுக்கிறது. ஏற்கெனவே சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் பதவியிடங்கள் ஏலத்தில் விடப்படுவதாகவும், பல இடங்களில்  போட்டியிடும் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

எளிய  மக்களின் கைகளுக்கு அதிகாரம் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டிய ஆளுங்கட்சியானது, தனது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இப்பிரச்சினையை உள்ளார்ந்து நோக்கினால், சமூகநீதிக்கு எதிரான சாதிய விரோதப்போக்கும் தென்படுகிறது. பொதுவாக தன்னை சாதியத்துக்கு எதிரான அரசியல் இயக்கமாக முன்நிறுத்திக்கொள்ளும் தி.மு.க-வின் (DMK) நிஜமுகம் இதுதான் என்பதையும்  காட்டுகிறது. 
 ஆக, அதிகாரம் கையில் இருப்பதைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடத் துவங்கியிருப்பது கண்ணுக்குப் புலனாகிறது. இப்படிப்பட்ட சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நடக்குமா என்ற கேள்விகள் வலுவாகின்றன. 

வேட்பாளர்கள் மிரட்டப்படுவது, அச்சுறுத்தி வாபஸ் வாங்கவைப்பது  போன்ற செயல்களைத் தடுக்க மாநில தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்றே குற்றம்சாட்டுகிறோம். தேர்தல் பிரச்சாரம் முறையாக நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பதவியேற்பு முடியும் வரை மாநிலத் தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு   சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகிறது.  

வேட்புமனு வாபஸ் விவகாரம் காரணமாக எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்ய (MNM) வேட்பாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கும்  மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, காவல்துறையானது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆளுங்கட்சியானது எதிர்க்கட்சி வேட்பாளர்களைக் கண்டு அஞ்சாமல் நேர்மையாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.” என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ALSO READ: 'ஒரு நாள் கூட அவகாசம் கிடையாது’: உள்ளாட்சி தேர்தல் குறித்த மனுவிற்கு உச்சநீதிமன்றம் காட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News