சென்னை: சென்னை அண்ணாநகர் இல்லத்தில் முன்னாள் சபாநாயகரும், அதிமுக-வின் மூத்த தலைவருமான பி.எச் பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
"என்போன்ற மூத்த வழக்கறிஞர்கள் யாருமே நோயாளி மருத்துவமனைக்கு போகும் முன்பு என்ன நடந்திருக்கும் என்று யோசிப்போம். ஜெயலலிதா வீட்டில் ஏதோ வாக்குவாதம் நடந்து மன அழுத்தத்தால் கீழே விழுந்துள்ளார். இந்த தகவல் மறுநாள் பத்திரிகைகளில் வந்தது. ஆனால் பேட்டியளித்தவர்களோ அம்மாவுக்கு ஒன்றுமே இல்லை என்றார்கள்.
நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். 2-வது மாடியில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு அந்த தளத்தில் அதே வரிசையில் டாக்டர்களுக்கு என்று ஒரு அறை இருந்தது. அந்த அறைக்குள் அமர்ந்து கொண்டு டாக்டர்களிடம் விவரம் கேட்க முனைந்தேன். விவரம் சொல்ல யாருமே இல்லை. ஆனால் ஜெயலலிதாவின் மெய்க் காப்பாளர்கள், அம்மா நலமாக இருக்கிறார், சீக்கிரம் வருவார் என்று கூறினர்.
பல நாட்கள் நானும் அப்பல்லோ சென்றேன். அங்கே அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அமர்ந்து செய்திகளை பற்றி விவாதிப்போம். ஆனால் எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரம் சொல்லப்படவில்லை.
ஜெயலலிதா மரணமடைந்ததும் சசிகலா, உறவினர்கள் கண்ணீர்விடவில்லை. டிசம்பர் 5-ம் தேதி இரவு அப்பல்லோவில் ஜேம்ஸ்பாண்ட் கோட்டுடன் சசிகலா உறவினர்கள் ஆதிக்கம்.
சசிகலா குடும்பத்தை பற்றி ஜெயலலிதாவிடம் நேரில் நான் எடுத்து கூறினேன். அப்போது நான் பார்த்து கொள்கிறேன் என ஜெயலலிதா கூறினார்.
பொதுச்செயலாளர் தேர்வுக்காக கட்சியின் விதிகளை மாற்ற முடியாது. சசிகலா பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வராக தகுதி இல்லாதவர்.
ஜெயலலிதா சொத்துக்களை அபகரிக்க சதி நடக்கிறது. என் சொத்துக்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என ஜெயலலிதா கூறினார்.