பதவிக்காக கெஞ்சி, கமிஷனே கதி என விழுந்து, தவழ்ந்து கிடக்கும் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு யோக்கியதை இல்லை..!
"கழக ஆட்சியில் மக்கள் பணியாற்றிய தமிழகக் காவல்துறை பற்றி பேச - பதவிக்காக கெஞ்சி, கமிஷனே கதி என விழுந்து, தவழ்ந்து கிடக்கும் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு யோக்கியதை இல்லை" என முனைவர் க.பொன்முடி காட்டாம்.
முன்னாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி MLA அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.... “அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக இயங்குகிறது” என்று ஒரு அண்டப் புளுகு அறிக்கையை வெளியிட்டு, எங்கள் கழகத் தலைவரை விமர்சனம் செய்திருக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. மீது குறை கூறினால் – அதற்குப் பதில் சொல்ல வக்கின்றி திசை திருப்பி - அதுவும் பொய் அறிக்கை விடுவதையே “கொள்கையாக” வைத்துள்ளார்கள் அமைச்சர்கள் என்பதற்கு, சி.வி. சண்முகத்தின் அறிக்கை, இன்னொரு ஆதாரமாக வெளிவந்திருக்கிறது.
அமைச்சர் சி.வி சண்முகம் பாவம். அவர் அடிக்கும் “கனிமக் கொள்ளைக்காக” போலீஸ் துறையின் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமியை “எடப்பாடியார்” என்று புகழ்ந்திருக்கிறார். அது “கூவத்தூருக்கு”ப் பிறகு அவருக்குக் கைவந்த கலையாகி விட்டது.
“மாவட்டத்தில் யாரை வேண்டுமானாலும் வைத்து என்னை அசிங்கப் படுத்திக் கொள்ளுங்கள். என்னைக் கொல்ல வந்தவர்களுடன் கூட்டணி வைத்தால் கூட கவலையில்லை. அவர் வீ்ட்டில் விருந்து சாப்பிட்டாலும் பரவாயில்லை. ஆனால் என் அமைச்சர் பதவியை மட்டும் எடுத்து விடாதீர்கள் "ப்ளீஸ்” "என்று கெஞ்சி - “கமிஷனே” கதி என்று விழுந்து – தவழ்ந்து கிடக்கும் சி.வி. சண்முகத்திற்கு கழக ஆட்சியில் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழக காவல்துறையைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?
மூன்று தர்மபுரி மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினரை முன்கூட்டியே விடுதலை செய்த அ.தி.மு.க. ஆட்சிக்கு, சட்டத்தின் ஆட்சி பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
கூவத்தூரில் காவல்துறையைக் காலடியில் நிற்க வைத்து கூத்தடித்த கும்பலுக்கு, காவல் துறை பற்றிக் கூற என்ன தகுதி இருக்கிறது?
காவல்துறையின் சுதந்திரம் பற்றி “கைகிழிய” அறிக்கை விட்டுள்ள சி.வி.சண்முகம் யார் தெரியுமா?
Also read: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்: CM
"திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள என் வீட்டை பயங்கரமாகத் தாக்கினார்கள். கல்லாலும், பீர்பாட்டிலாலும் கொடூரமாக அடித்தார்கள். அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினார்கள். அதில் என் சகோதரரின் மைத்துனர் கொலை செய்யப்பட்டு விட்டார். காருக்கு அடியில் படுத்து நான் மட்டும் உயிர் தப்பினேன்" என்று சென்னை - உயர்நீதிமன்றத்தில் வாதிட்டாரே ! அந்தக் காட்சிகள் எல்லாம் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டில் நடந்த வன்முறைக் காட்சிகள். தமக்கே பாதுகாப்பு இல்லாத அ.தி.மு.க. ஆட்சியில், காவல்துறை சுதந்திரம் பற்றி அமைச்சர் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது.
“தமிழகக் காவல்துறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று, உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டியவர்தான், இன்றைக்கு “எங்கள் ஆட்சி, தவறிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் ஆட்சி” என்று “பித்தலாட்ட” அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல; "என் மைத்துனரின் சகோதரர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்" என்று, அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற இந்த சண்முகம்தான் இன்றைக்கு, “அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது” என்று “அளவு கடந்த கதையை” அளக்கிறார். அதற்கு ஏதாவது துளியாவது சண்முகத்திற்கு தகுதி இருக்கிறதா?
காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதில் நம்பிக்கையிருந்தால், ஏன், “தேர்தல் முறைகேடுகளுக்கு உதவி செய்த” டி.ஜி.பி. ராமானுஜத்திற்கு பல ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து தொடர்ந்து டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது?
பணியில் நேர்மையாக இருந்த அசோக் குமார் டி.ஜி.பி.- குட்கா வழக்கை விசாரிக்கிறார் என்றதும், ஏன் இரவோடு இரவாக நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்?
'குட்கா புகழ்' டி.கே. ராஜேந்திரனுக்கு ஏன் டி.ஜி.பி. பதவி வழங்கி - பணி நீட்டிப்பும் கொடுக்கப்பட்டது?
“டி.ஜி.பி பொறுப்பில் உள்ளவருக்கு அந்தப் பதவியில் இரு ஆண்டு நிலையான பணிக்காலம் அளிக்க வேண்டும்” என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏன் வளைக்கப்பட்டது?
அ.தி.மு.க. அரசின் - குறிப்பாக, கொடநாடு கொலை - கொள்ளை விவகாரங்களை மறைப்பதற்குத்தானே?
ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக நடந்த கொடநாட்டு கொலை - கொள்ளை யாருக்காக நடந்தது?
தைரியம் இருந்தால் அது பற்றி சண்முகம் அறிக்கை விடத் தயாரா?
Also read: பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் கூடாது: மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம்!
இன்றைக்கு தமிழகக் காவல்துறை இவ்வளவு மோசமான பாதையில் வந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுப் பொறுப்பும் - அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் பழனிசாமிக்குமே சேரும். அதில் நூறு சதவீதம் அல்ல; 200 சதவீதம் சரியே.
அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு துணிச்சல் இருந்தால், தங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் மாற்றங்களுக்காக கொடுத்த அமைச்சர்களின் பரிந்துரைக் கடிதங்களை வெளியிட்டு பொது விவாதத்திற்குத் தயாரா?
தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக இருந்த தமிழகக் காவல்துறையை தரம் தாழ்த்தியது அ.தி.மு.க. ஆட்சி. அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற அமைச்சர்கள். ஆகவே அதற்காக அவர்தான் தமிழகக் காவல்துறையில் – காவலர் முதல் டி.ஜி.பி. வரையுள்ள அனைவரிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகக் காவல்துறையில் உள்ள காவலர் முதல் அதிகாரிகள் வரை, கொரோனா பேரிடரில் ஆற்றிய பணிகளை - அவர்களை டாஸ்மாக் கடைகள் முன்பு பாதுகாப்பிற்கு நிறுத்தி வைத்து சிறுமைப்படுத்திய அ.தி.மு.க. ஆட்சிக்கு- அதில் அங்கம் பெற்றுள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து சுட்டு விரல் நீட்டிப் பேசக் கூட அருகதையும் இல்லை.
“பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது” போல், திட்டமிட்டு- திசை திருப்பி பொய் அறிக்கை விடுவதை நிறுத்தி- விழுப்புரம் மாவட்டத்தில் 2212-ஆக அதிகரித்து விட்ட கொரோனா நோய்த் தொற்றையும், 28-ஆக உயர்ந்து விட்ட மரணங்களையும் தடுக்க சி.வி.சண்முகம் தன் பதவியை “பேரிடர்” நேரத்திலாவது பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.