உள்ளாட்சி தேர்தல்; தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்...

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தல் அமைதியான முறையில் தொடங்கியது. 

Last Updated : Dec 27, 2019, 08:47 AM IST
உள்ளாட்சி தேர்தல்; தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்... title=

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தல் அமைதியான முறையில் தொடங்கியது. 

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில்156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது

இன்று நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி கடந்த 16-ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல் படி 2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.4 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தபடவுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் எந்த வேட்பாளரும் முகாம்களை அமைக்க கூடாது எனவும், ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் ஒரு வேட்பாளர் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொதுவாக ஒரே ஒரு முகாம் மட்டும் 200 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகாம்களில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த முகாம்களில் சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் அல்லது வேறு பிற பிரசாரப் பொருட்கள் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும். முகாம்களில் தின்பண்டங்கள் வினியோகம் செய்யவோ, மக்கள் கூடுவதையோ அனுமதிக்க கூடாது. வாக்காளர்களுக்கு எந்தவகையிலும் லஞ்சம் அல்லது பரிசு பொருட்கள் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே நடத்தப்படும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 30-ஆம் தேதி நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News