குடும்பங்களில் நிகழும் வன்முறை வளரும் தலைமுறையினருக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அந்த கோரத்துக்கு மாணவர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். தேர்வு சரியாக எழுதவில்லை எனில் தற்கொலை, வீட்டில் பிரச்சனை என்றால் தற்கொலை என்று தற்போதைய மாணவர்களின் மனநிலை சிக்கல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இதுதொடர்பாக உளவியல் நிபுணர்கள் மூலம் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. ஏனெனில், மாணவர்களின் தற்கொலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன.
மேலும் படிக்க | போலீஸ் தாக்கியதால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக புகார்
வீட்டில் தாய், தந்தை தொடர்ந்து சண்டையிட்டு வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பிளஸ் 2 மாணவர் ஒருவர், உருக்கமான கடிதம் ஒன்றை தனது அம்மா, அப்பாவுக்கு எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மேகலா. இந்த தம்பதிக்கு தருண் என்ற மகன் இருந்து வந்தார். மெட்டாலா அடுத்த ராஜபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் உயிரியல் 12 ஆம் வகுப்பு படித்து வந்த தருண், வீட்டில் நடைபெறும் குடும்பச் சண்டை காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இவரது தந்தையான ரவியும், தாய் மேகலாவும் அடிக்கடி சண்டையிட்டு, ஒருகட்டத்தில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்த மாணவர் தருண், யாருமில்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு தனது தாய், தந்தைக்கு மாணவர் தருண் எழுதிய கடிதம் அனைவரையும் உருக வைத்துள்ளது. அதில், ‘சண்ட போடாம ஒத்துமையா இருங்க. குடி போதையில இருந்து வெளிய வந்து அம்மாவ பத்திரமா பாத்துக்கோங்க. என் சாவிலாவது நீங்க ஒன்னு சேரனும்.’ என்று குறிப்பிட்டுள்ளார். காலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்த மாணவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக பேளுக்குறிச்சி காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவர் எழுதிவைத்துவிட்டுச் சென்ற கடிதத்தையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 12ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய குழந்தைகள் நல ஆர்வலர்கள், ‘வளரும் மாணவ சமூகத்தினர், குடும்பங்களில் நிகழும் வன்முறையாலும், பிரச்சனைகளாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது, மாணவர்களது படிப்பினை பெரிதும் பாதிக்கிறது. மாணவர்களுக்கு இதுமாதிரியான எண்ணங்கள் வராமலிருக்க ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சிலிங் குழு அமைக்க வேண்டும். எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வே அல்ல என்ற விதையை அவர்களுக்கு மிக ஆழமாக விதைக்க ஆசிரியர்களும் முன்வர வேண்டும். மனம் திறந்து மாணவர்கள் பேசக்கூடிய ஒரு சூழலை பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். ஆசிரியர்களுடனான ஒரு சில மாணவர்களின் மோதலைக் கருத்தில் கொண்டு பெரும்பாலும் மாணவர்களுடன் ஆசிரியர்கள் இப்போதெல்லாம் உரையாடுவதே இல்லை.
மேலும் படிக்க | நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரமா ?
தன்னிடம் மோதும் மாணவர்களுடனும் மனம் திறந்து உரையாட முன்வரும் ஆசிரியரே இந்த இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் தேவை. அத்தகைய ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களை சீர்தூக்கி பக்குவப்படுத்த முடியும்’ என்று தெரிவித்துள்ளனர்.
(உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்க்காணும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தமிழ்நாடு அரசு உதவி மையம் : 104 )
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR