ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று அதிமுகவின் எம்.எல்.ஏ. செம்மலை நேரடியாக தனது ஆதரவை தெரிவித்தார்.
அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக சார்பில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
சசிகலா தனக்கு 129 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்று கூறி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை வலியுறுத்தி வருகிறா்ர. இந்நிலையில் சசிகலாவை ஆதரித்து பேட்டியளித்து வந்த சிலர் தற்போது அணிமாறி ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை தனது ஆதரவை பன்னீசெல்வத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பன்னீர்செல்வத்தையும் சேர்த்து, அவரது அணியில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.கடந்த சில தினங்களாக பல்வேறு எம்.எல்.ஏக்கள் மற்றும் அ.திமுக-வினர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.