பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம்: பாமகவுக்கு மற்றொரு வெற்றி!

பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று, பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது!!

Last Updated : Mar 12, 2020, 12:14 PM IST
பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம்: பாமகவுக்கு மற்றொரு வெற்றி! title=

பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று, பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது!!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில்  எழுதப்பட வேண்டியது கட்டாயம் என்ற அரசாணை தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நல ஆணையர் நந்தகுமார் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆணையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில் 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக 1983, 1984 ஆகிய ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும். மற்ற மொழிகள் பெயர்ப்பலகையில் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும். இந்த விதி பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. ஏராளமான இயக்கங்களையும் நடத்தியிருக்கிறது. ஆனாலும், தமிழில் பெயர்ப்பலகைகளை எழுதுவதை கட்டாயமாக்குவது என்பது கைக்கெட்டியும் வாய்க்கெட்டாததாகவே  இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகை தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணையை செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இது வரவேற்கத்தக்கது.

பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்படுவது கட்டாயம் என்பது குறித்த அரசாணையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துவதுடன் மட்டும் தொழிலாளர் நல ஆணையரும், அரசும் ஒதுங்கிவிடக் கூடாது. அவ்வாறு ஒதுங்கினால் எந்த பயனும் ஏற்படாது. மாறாக,‘‘உணவுதரு விடுதிதனைக் ‘கிளப்’ என வேண்டும் போலும். உயர்ந்த பட்டுத்துணிக்கடைக்கு "சில்குஷாப்' எனும் பலகை தொங்குவதால் சிறப்புப் போலும். மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’’ என்ற பாரதிதாசன் வரிகளைத் தான்  மீண்டும், மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கும். இவ்விஷயத்தில் தமிழகத்தின் வரலாறு இது தான்.

பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை.  இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன்பயனாக 1977-ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற எம்.ஜி.ஆர், அடுத்த 50 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 8-ஆம் தேதி, அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில், 1948-ஆம் ஆண்டு பெயர்ப்பலகைகள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து, 575 எண் கொண்ட அரசாணையை பிறப்பிக்கச் செய்தார். அதன்பின்னர் 1983-84ஆம் ஆண்டில் 1541 என்ற எண் கொண்ட அரசாணையும், 1989-90 ஆம் ஆண்டில் 291 என்ற எண் கொண்ட அரசாணையும் பிறப்பிக்கப்பட்டன. ஆனால், கடந்த 43 ஆண்டுகளாக இந்த அரசாணைகள் செயல்படுத்தப்படாதது தான் பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லாமைக்கு காரணமாகும்.

இனியும் அத்தகைய நிலை தொடரக்கூடாது. தொழிலாளர் நல ஆணையர் எச்சரித்துள்ளவாறு தமிழில் பெயர்ப்பலகை எழுதாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 அபராதம்  என்ற பழைய அணுகுமுறை நீடித்தால், அனைத்து பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மணக்கும் என்பது கனவாகவே இருக்கும். இத்தகைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டு கடுமையாக அபராதங்கள்  விதிக்கப்பட்டால் தான் பெயர்ப்பலகைகளை தமிழ் மொழிக்கு மாற்றும் அரசின் நோக்கம் நிறைவேறும்.

அதுமட்டுமின்றி, கடைகளின் பெயர்களில் உள்ள ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழில் எழுதுவது கூடாது என்று எம்.ஜி.ஆர் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலத்தில் Hotel என்று இருந்தால், அதை தமிழில் ஓட்டல் என்று எழுதும் வழக்கம் உள்ளது. அதைத் தவிர்த்து உணவகம் என்று தனித்தமிழில் எழுதப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று, பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது ஆகும். ஆனால், இந்த அறிவிப்பை செயல்பாட்டிலும் காட்ட வேண்டும். அவ்வாறு செய்யும் போது தமிழகத்தின் தமிழ்த் தெருக்களில் நிச்சயம் தமிழ் மணக்கும். 

 

Trending News