Anna University Sexual Assualt Case Latest News Updates: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா ஐபிஎஸ் தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் / முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி/பிரசுரித்து வருகின்றன. குறிப்பாக, "எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்", சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரியிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்", "திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்" என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும், இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொதுவெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும்" என விளக்கம் அளித்துள்ளது.
மேலும் படிக்க | யார் அந்த சார்? விடை தேடும் போலீஸ்..அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விசாரணை அப்டேட்!
அதுமட்டுமின்றி, "சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும்.
இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிச. 23ஆம் தேதி அன்று இரவு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியிடம், ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மாணவி தரப்பில் சென்னை ராஜா அண்ணாமலைப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காவல்துறையினர் கோட்டூர்புரத்தைச் ஞானசேகரன் என்பவரை கைது செய்து, மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர் இவர் தான் என அறிவித்தது. தொடர்ந்து அவருக்கு 15 நாள்கள் (ஜன. 8 வரை) நீதிமன்ற காவல் அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது, மனுக்களை தள்ளுபடி செய்தது. இருப்பினும், இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் மாணவி தரப்புக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அண்ணா பல்கலைக்கழகம் மாணவியின் கல்விக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கூடாது என்றும் அதே கல்லூரியில் அந்த மாணவி தொடர்ந்து படிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ