கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்

ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் புதிதாக தொற்று பதிவானவர்களில் 49 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2021, 10:48 AM IST
  • தமிழகத்தில் ஞாயிறன்று புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐத் தாண்டியது.
  • தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை 9,33,434 ஆக உயர்ந்துள்ளது.
  • இறந்தவர்களின் எண்ணிக்கை 12,908 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும் title=

சென்னை: எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு, தமிழகத்தில் ஞாயிறன்று புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐத் தாண்டியது. சனிக்கிழமையன்று 5,989 ஆக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு ஞாயிறன்று 6,618 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை 9,33,434 ஆக உயர்ந்துள்ளது. 22 பேர் இறந்த நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 12,908 ஆக அதிகரித்துள்ளது. 

88,538 மாதிரிகளும்  87,767 பேரும் சோதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பரிசோதனை நேர்மறை விகிதம் 7.4 சதவீதமாகவும், சென்னையின் பரிசோதனை நேர்மறை விகிதம் சனிக்கிழமை நிலவரப்படி 13.8 சதவீதமாகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 2,314 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சையில் உள்ளவ்ரகளின் எண்ணிக்கை தமிழகத்தில் 41,955 ஆக உள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை புதிதாக கொரோனா தொற்று (Coronavirus) பதிவானவர்களில் 49 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 2,124 பேரும் அதன் அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் முறையே 631, 206 மற்றும் 296 பேரும் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

மற்ற மாவட்டங்களிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கோவையில் 617 பேருக்கும், ஈரோட்டில் 119, மதுரையில் 173, நாகப்பட்டினத்தில் 159, சேலத்தில் 128, தஞ்சாவூரில் 178, திருவாரூரில் 100, தூத்துக்குடியில் 149, திருநெல்வேலியில் 144, திருப்பூரில் 177, திருச்சியில் 154 பேருக்கும் நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 10 க்கும் குறைவான புதிய தொற்று எண்ணிக்கை பதிவான ஒரே மாவட்டம் பெரம்பலூர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: கவனம்! கொரோனா ஆட்டம், ஆபத்தில் இந்த 16 மாநிலங்கள்!

ஞாயிறன்று தொற்று உறுதியானவர்களில் வான்வழியாகவும் சாலை வழியாகவும் பயணித்த 35 பயணிகளும் அடங்குவர். 

பொது சுகாதார இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஊடக செய்தி அறிக்கையில் படி, தொற்றால் நேற்று இறந்தவர்களில் இருவருக்கு மற்ற உடல் உபாதைகள் எதுவும் இல்லை என்றும், அவர்கள் முழுமையாக கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பால் மட்டுமே இறந்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பதிவான 22 இறப்புகளில், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு நாளிலேயே உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை 47,205 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது, இதில் 15,726 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 29,308 பேர் 45 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள், 1,377 பேர் முன்னணி ஊழியர்கள் மற்றும் 794 பேர் சுகாதாரப் பணியாளர்கள்.

இன்றுவரை, தமிழகத்தில் 37,80,070 பேருக்கு தடுப்பூசி (Vaccine) போடப்பட்டுள்ளது. பணி இடங்களிலும் தடுப்பூசி செயல்முறையை அரசு துவக்கியுள்ளது. வரும் நாட்களில் பணியிட தடுப்பூசி செயல்முறை தீவிரப்படுத்தப்படும் என்று பொது சுகாதார இயக்குனர் டி எஸ் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

ஏப்ரல் 14 முதல் 16 வரை அரசு தடுப்பூசி உற்சவத்தை நடத்தும் என்று அரசாங்கத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

ALSO READ: மக்கள் கவனத்திற்கு! Night Curfew பிறப்பிக்க நேரிடலாம்: எச்சரிக்கும் தமிழக அரசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News