தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (Banwarilal Purohit) சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், ராஜ் பவனில் (Raj Bhavan) தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜூலை 29 முதல் ராஜ் பவனில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இருந்து வந்தார்.
ஆளுநர் ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என ராஜ் பவனிலிருந்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
பன்வாரிலாலின் உடல்நலம் குறித்து கடைசியாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வந்த மருத்துவர்கள் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறினர்.
கடந்த சில நாட்களாக வழக்கமான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஜூலை 23 அன்று, ராஜ் பவனில் பணிபுரியும் 84 ஊழியர்களின் SARS-CoV-2 பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தன. ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 29 அன்று, மேலும் மூன்று நபர்களுக்கு COVID-19 இருப்பது கண்டறியப்பட்டது.
ALSO READ: ஆளுநர் மாளிகையில் நுழைந்தது கொரோனா: 84 பேருக்கு தொற்று உறுதி!!
"கடந்த வாரம் COVID-19-க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள ராஜ் பவனின் 38 நபர்கள் COVID-19 க்கு பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில், 35 நபர்களின் முடிவுகள் எதிர்மறையாக வந்தன. மூன்று நபர்களுக்கு மட்டுமே நேர்மறை முடிவுகள் வந்தன. இவர்கள் சுகாதாரத் துறையால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட குறிப்பு தெரிவிக்கிறது. இதற்குப் பிறகுதான் ஆளுநர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ராஜ் பவன் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ் பவனில் தொற்றால் பாதிக்கப்பட்ட 84 ஊழியர்களில் யாரும் 81 வயதான ஆளுநருடன் தொடர்பு கொள்ளவில்லை என்று ஆளுநர் அலுவலகம் கூறியிருந்தது.
பன்வரிலால் புரோஹித் செப்டம்பர் 30, 2017 அன்று தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடில், சனிக்கிழமை நிலவரப்படி, 2,51,738 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56,738 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த வைரஸ் காரணமாக மார்ச் முதல் மொத்தம் 4,034 நோயாளிகள் இறந்துள்ளனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்படோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.