ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மெல்போர்ன் நகரிலுள்ள பல்கலைகழகங்களை பார்வையிட்டார்!
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பல்கலைகழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்த எல்லைகளை விரிவுபடுத்தவும், அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் நோக்கிலும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள அமைச்சர், இரண்டாவது நாளான இன்று மெல்போர்ன் நகரிலுள்ள மோனாஷ் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழகங்களை பார்வையிட்டார்.
அங்குள்ள நவீன வசதிகளையும், ஆய்வுக் கூடங்களையும் பார்வையிட்ட அமைச்சர், பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கால்நடை நோய்ப்புலனாய்வு மற்றும் நோய்த்தடுப்பூசி உருவாக்குவதில் இணைந்து செயல்பட ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் பேராசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஆய்வுகள் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்நிகழ்வின் போது அமைச்சருடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பாலச்சந்திரன், கால்நடை பராமரிப்பு மற்றும் சேவைகள் இயக்குநர் ஞானசேகரன் ஆகியோரும் உடனிருந்தனர்.