தஞ்சாவூர் துயர சம்பவத்தால் பேரதிர்ச்சியும் பெருந்துயருமடைந்தேன்: சீமான்

Tamil Nadu Temple Chariot: தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்: சீமான்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2022, 11:52 AM IST
  • தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழ்ந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தலைவர்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
  • மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து, பேரதிர்ச்சியும் பெருந்துயருமடைந்தேன்-சீமான்.
தஞ்சாவூர் துயர சம்பவத்தால் பேரதிர்ச்சியும் பெருந்துயருமடைந்தேன்: சீமான் title=

தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள களிமேடு கிராமத்தில் பிரபல அப்பர் கோலிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவில், தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழ்ந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தலைவர்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

‘தஞ்சாவூர் அருகே, களிமேடு  கிராமத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது,  உயர் அழுத்த மின்கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில், மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து, பேரதிர்ச்சியும் பெருந்துயருமடைந்தேன். ஈடு செய்யவியலாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், துயரிருளில் மூழ்கியுள்ள களிமேடு கிராமத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் போடப்பட்ட தார் சாலைதான் இத்தேர் விபத்துக்கான மூலக்காரணம் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. பழைய சாலையை அகற்றிவிட்டு, புதிய சாலையமைக்காமல், அதன் மேலேயே ஒன்றரை அடி உயரத்திற்கு, சாலை போட்டதால் பக்கவாட்டில் ஏற்பட்டப் பள்ளத்தின் விளைவாகவே, தேர் நிலை தடுமாறி, மின்விபத்து ஏற்பட்டு, உயிர்கள் பறிபோயிருக்கிறது. 

ஊழல், முறைகேடு அமைப்பு முறைகளால் எந்தளவுக்கு மக்களைப் பாதிக்கிறது; மக்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு கோரச்சாட்சியமாகும்.

மேலும் படிக்க | தேரில் மின்சாரம் பாய்ந்து 12 பேர் பலி! தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு 

தற்போது திருவிழாக்காலம்  என்பதால், தமிழ்ப்பண்பாட்டின் முக்கிய அங்கமாக விளங்கும் கோயில் திருவிழாக்கள் தமிழகக்கிராமங்கள்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. நம்பிக்கையுடனும், உறவுகளின் ஒன்றுகூடல் மகிழ்ச்சியுடனும் பெருந்திரளாக மக்கள் திருவிழாக்களில் பங்கேற்கும் அதே வேளையில், எனதருமை உறவுகள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் நிகழ்வுகளில் பங்கெடுக்க வேண்டுமெனவும், திருவிழாக்களைப் பாதுகாப்பாக நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். 

இரண்டாண்டு காலமாக, கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகளால் தடைப்பட்டிருந்த திருவிழாக்கள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெறுவதால் மக்கள் பெறும் உற்சாகத்துடன், பெருங்கூட்டமாக அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதால், தமிழ்நாடு அரசு மக்களின் பாதுகாப்பிற்கு எவ்விதத் தீங்கும் நேராதவாறு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனியாவது அரசு விழிப்படைந்து, சிற்றூர்கள் உட்பட திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் போதியப்பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனக் கோருகிறேன்.

ஆகவே, களிமேடு கிராமத்தில் நடைபெற்ற இத்துயரச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாயும், தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருபவர்களுக்கு 05 இலட்ச ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இத்தோடு, அப்பகுதியில் தரமற்ற சாலையமைத்து உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்த அதிகாரிகள், ஒப்பந்ததார்கள் மீது கடும் சட்ட நடவடிக்கையைப் பாய்ச்ச வேண்டுமெனவும் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன்.’ என சீமான் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அரசு விடுதிகளில் முறைகேடுகளில் ஈடுபடும் விடுதி காப்பாளர்கள் - அதிர்ச்சி தகவல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News