தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் இருப்பதால் தான் ஆட்சியில் வீர நடை போட்டுக்கொண்டிருக்கிறோம்!!
தமிழகம் முழுவதும் முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மேட்டூர் அருகே இன்று காலை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், ஒவ்வொரு திங்கள் அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. இது தாலுகா அளவில், தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடக்கும்.
இந்நிலையில், கடந்த மாதம் தமிழக சட்டமன்றத்தில், 110 விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகம் முழுவதும் மக்கள் குறைகளை தீர்க்க, நேரடியாக கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் வார்டுகளுக்கு சென்று மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, நிவர்த்தி செய்ய முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சித்துறை மற்றும் பிறத்துறை அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் ஒரு குறிப்பிட்ட நாளில் கிராமங்கள், நகரில் வார்டுகளுக்கு சென்று மனுக்களை பெற்று, ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்வார்கள் என்றும் இத்திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவித்தபடி இத்திட்டத்தை சேலத்தில் இன்று தொடங்கி வைத்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பெரிய சோரகை பகுதியில் உள்ள கோயிலுக்கு வந்த முதல்வர் பழனிசாமி அங்கிருந்த மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் பேசுகையில்; அரசும், அரசு அதிகாரிகளும் வண்டியில் உள்ள இரண்டு சக்கரம் போன்றவர்கள். இரண்டும் சரியாக சென்றால் தான் இலக்கை அடைய முடியும். தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் இருப்பதால் தான் ஆட்சியில் வீர நடை போட்டுக்கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.