தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்டக்குழு, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி வார்டு எல்லைகள் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்ட வரைவுப்பட்டியல் 28.01.2017 அன்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரால் வெளியிடப்பட்டது.
இந்த வரைவுப்பட்டியலில் ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில் வருகின்ற 02.01.2018 மாலை 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடமோ, மாவட்ட ஆட்சியர் அவர்களிடமோ நேரிலோ, பதிவுத் தபால் மூலமோ தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது;-
மிக நீண்டகால இடைவெளியில் மறுசீரமைப்புச் செய்யப்படுகின்ற இந்த வரைவுப் பட்டியலை பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், முன்னாள் மற்றும் வருங்கால உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் முறையாக ஆய்வு செய்து தங்கள் கருத்துகளை தெரிவித்திட ஐந்தே ஐந்து நாட்களை அதுவும் இரண்டு நாட்கள் பொதுவிடுமுறையைக் கூட கவனத்தில் கொள்ளாமல் ஒதுக்கி உள்ளது ஏற்புடையது அல்ல.
அவசர காலத்தில் அள்ளித் தெளித்ததுபோல் இல்லாமல் உள்ளாட்சி அமைப்பு வார்டுகளின் எல்லைகளை அனைத்து தரப்பினரும் ஏற்கத்தக்க வகையில் மேற்கொள்வதற்கு வசதியாக அவர்கள் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான கால அளவை தொடர்ந்து வரும் பொங்கல் விடுமுறை தினங்களைக் கருத்தில் கொண்டு 2018 ஜனவரி 25 வரை நீட்டித்திட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.