தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார் ஒன்றில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பார் ஒன்றில் தீபாவளியை முன்னிட்டு ₹ 1000-க்கு மேல் மது அருந்தினால், அவர்களுக்கு கலர் டிவி பரிசளிக்கப்படும் என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மதுபான விற்பனையினை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், குறிப்பாக தீபாவளி நாளில் மட்டும் ₹ 150 கோடி வரை மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு மதுக்கடை, பார்கள் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகின்றது.
அந்த வகையில் மதுப்பிரியர்களை கவர சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பார் ஒன்றில் ₹ 1000-க்கு மேல் மது அருந்தினால், அவர்களுக்கு கலர் டிவி பரிசளிக்கப்படும் என விளம்பர பலகை வைத்துள்ளனர். சட்டத்தை மீறிச் செயல்பட்டதால் இந்த பார் உரிமையாளர்கள் இருவரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னைவாசிகளை மட்டும் அல்லாமல், சமூக ஊடகங்களில் இந்த விளம்பர பலகை பரவி நாடுமுழுவதும் கவனத்தினை ஈர்த்துள்ளது. காரணம் இந்த விளம்பரத்தில் அறிவிகப்பட்ட பரிசுகள்... (32" கலர் டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ்) போன்றவை. கிடைப்பெற்ற தகவல்களின் படி அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரிலேயே மதுபானக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகாரினை அடுத்து குறிப்பிட்ட பாரின் மேலாளர் வின்சென்ட் ராஜ், உரிமையாளர் ரியாஸ் அஹமத் ஆகியோரைக் கைது செய்தனர். பாரில் இருந்து கைப்பற்ற பட்ட டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்றவற்றை காவல்துறைக்கு கொண்டுசென்றுள்ளனர்.