தமிழகத்தின் 36-வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை..!

வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!!

Last Updated : Nov 28, 2019, 02:47 PM IST
தமிழகத்தின் 36-வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை..! title=

வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!!

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, வேலூர் மாவட்டமானது, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு, மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இரு இடங்களில் பிரம்மாண்ட தொடக்க விழா நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா இன்று காலை திருப்பத்தூர்  டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடந்தது.

தமிழ்நாட்டின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும் தொடங்கி வைத்தார். ரூ.94 கோடியே 37 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவில் ரூ.89 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.184 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்,  தொடக்க விழா நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது-. திருப்பத்தூரில் விழா நடக்கும் இடத்தில் 1000 போலீசார், ராணிப்பேட்டையில் 1000 போலீசார் மற்றும் முதலமைச்சர் செல்லும் பாதைகளில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் என மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதை தொடர்ந்து, 36-வது மாவட்டமாக உருவாகியுள்ள ராணிப்பேட்டை, ஒரு மக்களவை தொகுதியையும் (அரக்கோணம்), 4 பேரவை தொகுதிகளையும் (ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம்), 5 நகராட்சிகளையும், 9 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 வருவாய் கோட்டங்களும், வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், நெமிலி ஆகிய 4 தாலுக்காக்களும் இடம்பெற்றுள்ளன.  

 

Trending News