தமிழக அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பாக, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோருடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
ஆளுங்கட்சியான அதிமுக-வில், ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவாக, மோதல் ஏற்பட்டுள்ளது. சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள சூழலில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில், தமிழக டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்து, ஆலோசனை நடத்தினார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட சில முக்கிய வழக்கு விசாரணைகள் குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதன்பின்னர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியாநாதனும் அங்கே வந்தார். அவருடன், அரசு நிர்வாகச் செயல்பாடுகள், அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி, பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.