உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் முதல் முறையாக உத்தரவிட்டுள்ளது!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்கிறது.. வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 16 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19 ஆம் தேதி கடைசி நாளாகும். வரும் 27 மற்றும் 30 ஆம தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜனவரி 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் முதல் முறையாக உத்தரவிட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவோர் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். அடுத்தடுத்து தேர்தல்களில் இவர்கள் தாக்கல் செய்யும் சொத்து பட்டியல்களை அதிகாரிகள், வருமான வரித்துறையினர் கண்காணிப்பார்கள். சொத்து பட்டியலை தாக்கல் செய்யும் நடைமுறை தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் அமலுக்கு வந்துள்ளது.
வேட்பு மனுவுடன் சொத்து மற்றும் வழக்கு விவரங்களை தெரிவிக்கும் 3-ஏ என்ற உறுதிமொழி படிவமும் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள், தண்டனை விவரம் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். தனக்கும், குடும்பத்தினர் பெயர்களிலும் இருக்கும் சொத்துக்கள், விவசாய நிலங்கள், இதர சொத்துக்கள், வங்கியில் பெறப்பட்டுள்ள கடன்கள், முதலீடுகள், பண இருப்பு உள்ளிட்டவைகளை முழுமையாக கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஒன்றிய வார்டுகள் மட்டுமின்றி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரும் சொத்து விவர பட்டியலை நோட்டரி பப்ளிக் உள்ளிட்ட தகுதியானோர் முன்னிலையில் உறுதிமொழி அளிக்கப்பட்ட பத்திரங்களை வேட்புமனுவுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...... உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்கள் நிகழாமல் தடுக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகளை ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் ஆகும்.