டாஸ்மாக் கடைகள் திறப்பு; சென்னை மது விரும்பிகள் புலம்பல்...

தமிழ் நாடு முழுவதும் இன்று முதல் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மது விரும்பிகள் காலை முதலே மதுபான கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 7, 2020, 08:58 AM IST
டாஸ்மாக் கடைகள் திறப்பு; சென்னை மது விரும்பிகள் புலம்பல்... title=

சென்னை: தமிழ் நாடு முழுவதும் இன்று முதல் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மது விரும்பிகள் காலை முதலே மதுபான கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளனர். இதில் முக்கியமாக, இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், அங்கு வசிக்கும் குடிமக்கள், அண்டை மாவட்டங்களுக்கு செல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் சென்னை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மிக அதிகம் இருக்கும் காரணத்தால் சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. அதாவது தமிழக அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள், முன்பு அறிவித்தது போல, மே 7 அன்று திறக்கப்படமாட்டாது. இந்தா கடைகள் எப்பொழுது திறக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு உள்ளது. 

இருப்பினும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் சென்று மது வாங்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே சென்னை மாநகர காவல்துறை, மது வாங்க எல்லைதாண்டி டாஸ்மாக் கடைக்கு செல்பவர்களுக்கு எதிராக கடும் நிடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

மேலும் சென்னையை சுற்றி உள்ள அண்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கும் போது கட்டாயம் இருப்பிட முகவரியுடன் கூடிய அடையாளச் சான்றிதழ் காட்டினால் மட்டுமே மது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் சென்னையில் வசிக்கும் மது விரும்பிகளுக்கு எந்தவகையிலும் மது கிடைக்காது. 

முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வந்ததால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போடப்பட்டது. பின்னர் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மூன்றாவது முறையாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

முதல் இரண்டு முறை போடப்பட்ட ஊரடங்கு உத்தரவில் எந்தவித தளர்வும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக மதுபானக்கடைகளை திறக்க அனுமதில் அளித்தது. 

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, பல மாநிலங்களில் நேற்று முதல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. இதனைதொடர்ந்து தமிழகத்திலும் மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுதொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது.

அதில், "அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மதுபானக் கடைகளை இயக்க உத்தரவிட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் அண்டை மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்குச் செல்கின்றனர். அத்தகையவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் நிறைய சிரமங்கள் எதிர்கொள்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மே 7 முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது." என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேவேளையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியது.

Trending News