சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பரமாரிப்புப் பணியின் போது பேருந்து மோதியதில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது!
இந்த கோர விபத்தில், ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவில் 12.40 மணியளவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு பணிமனையில் இருந்த ஓய்வறையில் அமர்ந்து இருந்துள்ளனர். அப்போது ஓய்வறையின் அருகே அமைந்திருக்கும் பேருந்து பழுதுபார்க்கும் இடத்திலிருந்து பேருந்து இயக்கப்பட்ட போது, எதிர்பாராவிதமாக பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியுள்ளது.
இதில், சுவர் இடிந்து விழுந்தில் பணிமனை ஓய்வறையில் இருந்த ஓய்வெடுத்துகொண்டிருந்த ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சேகர் மற்றும் பாரதி என்ற இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிந்துள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வடபழனி காவல்துறையினைர வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, வடபழனி பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.