இரட்டை இலைக்கு லஞ்சம்: வெளிநாடு தப்ப தினகரன் திட்டம்?

Last Updated : Apr 19, 2017, 10:06 AM IST
இரட்டை இலைக்கு லஞ்சம்: வெளிநாடு தப்ப தினகரன் திட்டம்? title=

இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ. 50 கோடி வரை லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் திட்டமிட்டது அம்பலமானதை அடுத்து அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 

டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் சென்னைக்கு வந்துள்ளனர். டிடிவி தினகரன் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து விமானநிலையங்கள் விழிப்புடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி இரண்டாக பிளவு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்கேநகர் இடைத்தேர்தலில் சசிகலா, பன்னீர்செல்வம்  அணிகள், தனித்தனியாகப் போட்டியிட்டன.

இதையடுத்து, இரு அணியினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோர, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இந்நிலையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக, அதிமுக அம்மா அணியின் டிடிவிதினகரனிடமிருந்து ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சுகேஷ், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்தது. 

இதையடுத்து, லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக, டிடிவி தினகரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக தினகரனையும், இரண்டாவது குற்றவாளியாக சுகேஷ் சந்திராவையும் சேர்த்துள்ளனர். தினகரனை நேரில் சந்தித்து சம்மனை வழங்குவதற்காக டெல்லி துணை கமிசன் சஞ்சய் ஷெராவத் சென்னை வந்துள்ளார். லஞ்சம் கொடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

தினகரனிடம் விசாரிக்க டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒருவரே போலீசுக்கு போட்டு கொடுத்துள்ளார். 

டிடிவி தினகரனின் திட்டம் தெரியவந்ததை அடுத்து விமான நிலையங்களுக்கு போலீசார் சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

Trending News