இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ம் தேதி பொது ஊரடங்கை அறிவித்தது. இதனால் மக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இதன்மூலம் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்குச் செல்லும் போது ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பித்து பெற வேண்டும். குறிப்பாக அத்தியாவசிய, அவசரப் பயணங்களுக்காக மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ALSO READ | ஆகஸ்ட் 17 முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass: முதல்வர் கெ.பழனிசாமி
இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு பயணிப்பதில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அனைத்து மாநில/ யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், “மாநிலங்களுக்கு உள்ளும் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கவும் தடைகள் கூடாது என மத்திய அரசின் தளர்வு வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்ல இ-பாஸ் தேவையில்லை. பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரவும் இ-பாஸ் தேவையில்லை என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.
ALSO READ | E-paas வாங்கித் தருகிறோம் எனக் கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் -எச்சரிக்கை