புதுடெல்லி: இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், இன்று ராமர்கோயில்-பாபர்மசூதி (Ayodhya temple-Mosque) வழக்கான அயோத்தி நிலப்பிரச்சனை குறித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, காலை 10:30 மணிக்கு தொடங்கியது. 1992-ல் வலதுசாரி ஆர்வலர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவாக பல தசாப்தங்களாக ஏற்பட்ட ஒரு சர்ச்சைக்கு ஒரு தீர்வு கொண்டு வரப்பட்டது. ஆம், சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் (Supreme Court) அனுமதி அளித்ததோடு, இஸ்லாமியர்களுக்கு மாற்று இடமளிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி (Justice of India) ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அந்த நிலத்தை மாநில அரசோ அல்லது மத்திய அரசோ வழங்கும் என உச்ச நீதிமன்றம் உத்தவிட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குறித்து பார்போம்.
இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் (Chief Justice of India Ranjan Gogoi)
அசாமைச் சேர்ந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நாட்டின் உயர் நீதித்துறை பதவிக்கு 2018 அக்டோபரில் நியமிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். 1978-ல் பார் கவுன்சிலில் சேர்ந்த பயிற்சி பெற்ற பிறகு, கவுத்தி உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதி ஆனார். பிப்ரவரி 28, 2001 அன்று. அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். அதன் பிறகு, அவர் ஏப்ரல் 2012 இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தனது நீதிபதி வாழ்க்கையில் பல முக்கிய வழக்குகளை விசாரித்தவர். அதில் முக்கியமாக தேசிய குடிமக்கள் பதிவேடு (National Citizens Register) வழக்கு, இன்று வழங்கிய அயோத்தி வழக்கு தீர்ப்பு என்பவை ஆகும். நவம்பர் 17 ஆம் தேதி நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற உள்ளார். அதற்கு முன்னதாகவே 71 ஆண்டுகால பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நீதிபதி எஸ்.ஏ.போப்டே (Justice Sharad Arvind Bobde)
மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி எஸ்.ஏ.போப்டே, 2013 ஏப்ரலில் உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார். நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி சரத் அரவிந்த் போப்டே பெயரை பரிந்துரை செய்துள்ளார் குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2000 ஆம் ஆண்டில் கூடுதல் நீதிபதியாக பம்பாய் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி உள்ளார். 63 வயதான நீதிபதி எஸ்.ஏ.போப்டே அயோத்தி வழக்கை "உலகின் மிக முக்கியமான ஒன்று" என்று கூறியிருந்தார். அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இவர் தான் பதவியேற்க உள்ளார்.
நீதிபதி டி.ஒய் சந்திரசூட் (Justice Dhananjaya Y. Chandrachud)
இந்தியாவின் நீண்ட காலம் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரச்சூட்டின் மகன் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் உச்சநீதிமன்ற நீதிபதியாக 2016 மே மாதம், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் நியமிக்கப்பட்டார். அவர் அதற்கு முன்பு பம்பாய் உயர் நீதிமன்றத்திலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றினார். ஹார்வர்ட் (Harvard Law) சட்ட கல்லூரி பட்டதாரி ஆவார். நீதிபதி பணியை தவிர மும்பை பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் வருகை பேராசிரியராகவும், அமெரிக்காவின் ஓக்லஹோமா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் ஆசிரியராகவு பணியாற்றி வருகிறார் குறிப்பிடத்தக்கது.
நீதிபதி அசோக் பூஷண் (Justice Ashok Bhushan)
1979 ஆம் ஆண்டில் தனது நீதிபத்தி வாழ்க்கையைத் தொடங்கிய நீதிபதி அசோக் பூஷண், ஏப்ரல் 2001 இல் நீதிபதி பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு முன்னர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். அவர் ஜூலை 2014 இல் கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். சில மாதங்கள் கழித்து அவர் மார்ச் 2015 இல் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் நீதிபதி பூஷண் மே 13, 2016 அன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
நீதிபதி அப்துல் நசீர் (Justice Abdul Nazeer)
நீதிபதி அப்துல் நசீர் 1983 பிப்ரவரியில் வழக்கறிஞராக சேர்ந்தார் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அவர் பிப்ரவரி 2003 இல் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் பிப்ரவரி 17, 2017 அன்று உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார். நீதிபதி அப்துல் நசீர் ஆகஸ்ட் 2017 இல் தலைப்பு செய்திகளில் அதிகம் பேசப்பட்டார். அப்போது அவர், அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹருடன் (JS Khehar) சேர்ந்து, முத்தலாக் தடை சட்டத்தை "இறையியலில் பாவம்" (Sinful in Ttheology) எனக்கூறி, தனிப்பட்ட சட்டங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பளித்தார். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருஅவைகளிலும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.