தம்மை பதவி நீக்கச் சொல்ல கமல்ஹாசன் யார்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமலின் நாக்கை அறுக்க வேண்டும் எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 14, 2019, 01:16 PM IST
தம்மை பதவி நீக்கச் சொல்ல கமல்ஹாசன் யார்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி title=

சென்னை: கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கமலின் இந்த கருத்திற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் "யாரை திருப்தி படுத்த கமல் இவ்வாறு பேசி வருகின்றார்., யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறைகூறுவதா? என மிகவும் ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் மதத்தை புண்படுத்தும் படி பேசும் கமலின் கட்சியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சியின் பதிவினையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பதவிப்பிரமாணத்தின் போதுஎடுத்த உறுதிமொழியை அமைச்சர் மீறியுள்ளதால், ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், தம்மை பதவிநீக்கச் சொல்ல கமல்ஹாசன் யார்?. அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கமல் கட்சி ஆரம்பித்திருப்பாரா?. இந்துக்களின் மனதை கமல்ஹாசன் புண்படுத்திவிட்டார். கமல் கண்ணியம் மிக்க பேச்சு பேசியிருந்தால் நான் அவ்வாறு பேசியிருக்க மாட்டேன். இந்துக்களை விமர்சித்தால் கோபம் எப்படி வெளிப்படும் என்பதற்காகவே அவ்வாறு கூறினேன். கமல்ஹாசன் செய்த தவறை மறைப்பதற்காகவே என்மீது குறை கூறுகின்றனர் எனக் கூறினார்.

Trending News