விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை இரண்டாவது முறையாக குறைப்பு!

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை இன்று அதிகாலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டது!

Updated: Sep 4, 2019, 08:04 AM IST
விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை இரண்டாவது முறையாக குறைப்பு!

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை இன்று அதிகாலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டது!

சென்னை: சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் வட்டப்பாதை நிலவில் தரை இறங்க ஏதுவாக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலன் 6 முறை புவியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பு படங்களை எடுத்து அனுப்பியது. இதையடுத்து,  சந்திரயான்-2 விண்கலம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 

இதற்கான பணிகளை பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்டு வந்தது. பூமியின் படங்களை அனுப்பியது போல் நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் சுற்றும்போது நிலவின் மேற்பரப்பு படங்களையும் எடுத்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பியது. நிலவின் பள்ளங்களை அது தெளிவாக குறிப்பிட்டிருந்தது. 

இந்தநிலையில், ஆர்பிட்டரில் இருந்து நிலவில் தரை பகுதிக்கு செல்ல உள்ள விக்ரம் லேண்டரை தனியாக பிரிக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் மேற்கொண்டனர். அதன்படி, ஆர்பிட்டரில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 1.15 மணிக்கு விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக தனியாக பிரித்தனர். இதையடுத்து, இன்று அதிகாலை 3.42 மணிக்கு லேண்டரின் சுற்றுப் பாதையை மேலும் குறைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். 

9 வினாடிகளுக்கு எஞ்சின் இயக்கப்பட்டதாகவும், இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது விக்ரம் கலம் குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 101 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கி வருகிறது. இதன் மூலம் 7 ஆம் தேதி விக்ரம் கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.