தனிநபர் கணினி கண்காணிப்பு என்பது, அடிப்படை மனித உரிமை மீறல் ஆகாதா?...

கணினி கண்காணிப்பு என்பது அடிப்படை மனித உரிமை மீறல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!

Last Updated : Dec 21, 2018, 08:41 PM IST
தனிநபர் கணினி கண்காணிப்பு என்பது, அடிப்படை மனித உரிமை மீறல் ஆகாதா?... title=

கணினி கண்காணிப்பு என்பது அடிப்படை மனித உரிமை மீறல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!

நாட்டில் உள்ள எந்தவொரு கணினி, கைபேசியின் இயக்கத்தினை கண்கானிக்க, தேவைப்பட்டால் பயன்படுத்த 10 அமைப்புகளுக்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமூகவலைதளம், கணினி போன்றவற்றில் இருக்கும் தனிநபர் தகவல்களை, உரையாடல்களை முறையான அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தவோ, கண்காணிக்கவோ முடியாது. அவ்வாறு தகவல்களை கண்காணிப்பதும், கசியவிடுவதும் மிகப்பெறிய குற்றமாகும். 

இந்தநிலையில், நாட்டில் உள்ள எந்தவொரு தனிநபர் தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம் செய்யவும் 10 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 69(1)-ன் கீழ் புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவிக்கையில்... "அடிப்படை உரிமைகளையும், அந்தரங்க உரிமைகளையும் வெட்கமே இல்லாமல் கிண்டல் செய்கிறது மோடி அரசு, தேர்தலில் கிடைத்த தோல்வியால், மக்களின் கணினிகளை ஆய்வு செய்ய விரும்புகிறது. பெரிய அண்ணன் போல் நடந்து கொள்வதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மரபு" என குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவிக்கையில்... "ஒட்டுமொத்த கண்காணிப்பு என்பது மோசமான சட்டமாகும். உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு நாட்டின பாதுகாப்புக்கா, ஏற்கெனவே பல நிர்வாக முறைகள் இருக்கும் இந்த உத்தரவு பாதுகாப்புக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுமா?. இந்த உத்தரவால் அனைத்து பொதுமக்களும் பாதிப்படைய மாட்டார்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

சீதாராம் யெச்சூரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவிக்கையில்.. "நம் நாட்டின் மக்களை ஏன் கிரிமினல்கள் போல் நடத்துகிறீர்கள்?, ஒவ்வொரு மக்களையும் வேவுபார்க்கப் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது" என குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவிக்கையில்... "இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை 2014-ம் ஆண்டு முதல் நிலவுகிறது. அதிலும் கடந்த 2 மாதங்களாக மோடி அரசு அனைத்து எல்லைகளையும் மீறி, ஒவ்வொரு இந்தியரின் கணினியை கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முற்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளை நசுக்குவதைப் பொறுக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

Trending News