புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த லடாக்கின் ஒரு பகுதியை தவறாக சீனாவின் ஒரு பகுதியாக ஜியோடாக் (geotagging) செய்ததற்காக சமூக ஊடக நிறுவனமான ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக டிவிட்டர் இன்று இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியுள்ளது. தரவு பாதுகாப்பு மசோதா தலைவர் மீனாட்சி லேகி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
லடாக்கை சீனாவின் ஒருபகுதியாக தவறாக காட்டியதற்காக ட்விட்டர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளதாகவும், மாத இறுதிக்குள் பிழையை சரிசெய்வதாக உறுதியளித்ததாகவும் மீனாட்சி லேகி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
"ட்விட்டரிடமிருந்து எங்களுக்கு ஒரு பிரமாணப் பத்திரம் கிடைத்துள்ளது, அங்கு அவர்கள் லடாக்கின் ஒரு பகுதியை தவறாக ஜியோடாக் (geotagging) செய்து சீனாவின் ஒரு பகுதியாகக் காட்டியதை அவர்கள் தங்களது பிழை என்பதை ஒப்புக் கொண்டனர், மேலும் நவம்பர் 30 க்குள் அதை சரிசெய்வோம் என்று தெரிவித்தனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரைபடத்தை தவறாக geo-tagging செய்ததற்காக ட்விட்டர் மன்னிப்புக் கோரியுள்ளது. இதற்காக, ட்விட்டர் இன்க் (Twitter Inc) நிறுவனத்தின் தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கரியன் (Damien Karien) பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காட்டியதற்காக டிவிட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு, டிவிட்டர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்ற கேள்வியையும் கேட்டிருந்தது. டிவிட்டரின் செயல், இந்திய இறையாண்மைக்கு எதிரானது, தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தக்கூடியது என இந்தியா சீற்றம் காட்டியிருந்தது. இந்த நோட்டீஸ், டிவிட்டர் இந்தியாவிற்கு அல்ல, அமெரிக்காவைச் சேர்ந்த டிவிட்டரின் தாய் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது.
தரவு பாதுகாப்பு மசோதா தலைவர் மீனாட்சி லேகி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜரான ட்விட்டர் இந்தியாவின் பிரதிநிதிகள் “மன்னிப்பு கோரினர். ஆனால், இது நாட்டின் இறையாண்மையை கேள்விக்குட்படுத்திய ஒரு கிரிமினல் குற்றம் என்றும், ஒரு பிரமாணப் பத்திரத்தை ட்விட்டர் இன்க் சமர்ப்பிக்க வேண்டும், அதன் 'மார்க்கெட்டிங் நிறுவனமான' ட்விட்டர் இந்தியா அல்ல என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினர்கள் கூறிவிட்டனர்.
இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினை, விரைவாக தீர்க்கப்படும் என்று ட்விட்டர் கூறியது.
நாடாளுமன்றக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில், ட்விட்டர் இந்த பிரச்சினை "ஒரு தவறான புவி-குறிச்சொல்லின் (geo-tag) விளைவாக தரவுகளுடன் இணைந்த மென்பொருளில் ஏற்பட்ட பிழையின் காரணமாக ஏற்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
"கடந்த சில வாரங்களில், geo-tag சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். லே மற்றும் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள பிற நகரங்களும் இப்போது அந்தந்த நகரத்தின் பெயர், மாநிலம் மற்றும் நாட்டைக் துல்லியமாகக் காண்பிக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம்".
"இது தவிர, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பல்வேறு நகரங்களுக்கான ஜியோ-டேக்கையும் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பணியை 2020 நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடித்து விடுவோம்" என்று டிவிட்டர் கூறியுள்ளது.
இந்தியா ஒரு முன்னுரிமை சந்தை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக கூறும் மைக்ரோ-பிளாக்கிங் தளம் டிவிட்டர், பொது உரையாடல் மற்றும் சமூகங்களுக்கு சேவை செய்ய இந்திய அரசுடன் கூட்டுசேர உறுதிபூண்டுள்ளதாக டிவிட்டர் உறுதியளித்துள்ளது.
"இந்தியாவில் உள்ள எங்கள் குழு எந்தவொரு சிக்கலையும் அரசுடன் இணைந்து தீர்க்க முயலும். தற்போது ஏற்பட்ட பிழையின் காரணமாக இந்தியர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம், ”என்று டிவிட்டர் கூறியுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR