இலங்கை அரசாங்கத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைச்சர்களும் இன்று இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்!!
இலங்கையில் கடந்த மாதம் நடந்த தற்கொலைத் தாக்குதல்கள் நாட்டை அதிர்ச்சியடைய செய்திருந்தாலும், அதன் தாக்கம் அடுத்தடுத்து அரசியலிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைச்சர்களும் இன்று இராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான விவகாரத்தில், அதிபர் மைத்ரி பால சிறிசேனா தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அனைத்து இஸ்லாமிய அமைச்சர்களும் இன்று இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இது குறித்து பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கையில் நடந்த நிகழ்வுகளுடன் அமைச்சர்கள் யாரேலும், ஏதாவது முறையில் சம்பந்தப்பட்டிருந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். அமைச்சர் பதவிகளை விட்டு விலகினாலும் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படுன் என்றும் அவர் தெரிவித்தார்.