காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் தவிக்கும் போது, அப்படியே காரோடு வானத்தில் பறந்து செல்லும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என கண்டிப்பாக யோசித்திருப்போம். இந்தக் கனவு தற்போது நனவாகி உள்ளது.
சீனாவைச் சேர்ந்த எக்ஸ்பெங் என்ற நிறுவனம் துபாயில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பறக்கும் டாக்சி செயல்படும் விதம் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
பறக்கும் டாக்ஸி
பறக்கும் டாக்சி அல்லது ஏர் டாக்சி குறித்து நீண்ட காலமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களிலும் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கும் ஏற்ற மாற்றுப் போக்குவரத்தாக ஏர் டாக்சி குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
டொயோட்டா, உபெர், ஹூண்டாய், ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற பல நிறுவனங்கள் பறக்கும் டாக்சி சேவை குறித்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையின்படி, 2040-ம் ஆண்டில் பறக்கும் டாக்சிக்கான சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஃப்ரோஸ்ட் & சுல்லிவன் ஆய்வறிக்கையின்படி துபாயில் 2022-ம் ஆண்டு ஏர் டாக்சி சேவை தொடங்கப்படும் எனவும், 46% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் 2040-ம் ஆண்டுக்குள் 4,30,000-க்கும் மேலான பறக்கும் டாக்சிகள் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பாகிஸ்தானை மிரட்டும் மலேரியா... இந்தியாவிடம் இருந்து கொசு வலைகள் வாங்க திட்டம்!
துபாயில் ’பறக்கும் டாக்ஸி’
சீனாவின் குவாங்சோவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ’எக்ஸ்பெங் இன்க்’ என்ற விமானப் போக்குவரத்து நிறுவனம், துபாயில் உள்ள மெரினா மாவட்டத்தில் XPeng X2 என்ற பறக்கும் டாக்ஸியை சோதனை செய்தது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், 2 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 130 கிலோமீட்டர் (80 மைல்) வேகத்தில் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையில் பயணிகள் இல்லாமல் வெறும் வாகனம் மட்டும் பரிசோதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பயணிகளை வைத்து சோதனை செய்யப்பட்டதாக எக்ஸ்பெங் நிறுவனம் கூறியுள்ளது. இந்த விமானம் 90 நிமிடங்கள் எந்த இடையூறுமின்றி பறந்து சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த பறக்கும் டாக்சி விமானி இன்றி தானியங்கி முறையில் இயங்கக் கூடியதாகும். இதில் கார்பன் உமிழ்வு இல்லாததால் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
WATCH VIDEO:Created by a Chinese company called #XPENG AEROH, this test of the #electric flying taxi offers a glimpse into the future, where people may one day soar through over the city to their destination, leaving traffic jams far below. @XPengMotors pic.twitter.com/Mkhbwprbbj
— ShanghaiEye official (@ShanghaiEye) October 12, 2022
பறக்கும் டாக்ஸி சந்தை
பறக்கும் டாக்சிகளை உருவாக்கி சோதிக்க முயற்சிக்கும் முயற்சியில் சீனாவின் எக்ஸ்பெங் நிறுவனம் மட்டுமின்றி பல நிறுவனங்கள் உள்ளன. போயிங் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் விஸ்க் ஏரோ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், 4 பயணிகள் அமரும் வகையில் இயங்கக் கூடிய பறக்கும் டாக்சியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஊபர் போன்று செயலி மூலம் ஏர் டாக்சி சேவையை வழங்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் விஸ்க் ஏரோ நிறுவனம் கூறியுள்ளது.
ஏர் டாக்சி தயாரிப்பில் உள்ள நிறுவனத்தில் 394 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகக் கடந்த 2020-ம் ஆண்டு டோயோட்டோ நிறுவனம் அறிவித்தது. இதேபோல், ஹூண்டாய் - உபெர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 2020-ம் ஆண்டு லாஸ் வேகாஸில் ஒரு பெரிய பறக்கும் டாக்ஸியின் சோதனை வடிவத்தைக் காட்டின. மின்சாரத்தில் இயங்கும் இந்த விமானம், நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறனைக் கொண்டது. மணிக்கு 180 மைல் வேகத்தில் 60 மைல்கள் வரை பயணம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறையின் அடுத்த பரிணாமமாக பறக்கும் டாக்சிகள் இருக்கும் என போக்குவரத்துத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏர் டாக்சிகள் பரவலாக வணிகமயமாகும்போது, அவை நகரச் சாலைகளில் போக்குவரத்துச் சுமையை நிச்சயமாகக் குறைக்கும் என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சவால்கள்
தானியங்கி முறையில் இயங்குவதால் இந்த வாகனங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். மேலும் இந்த வாகனங்கள் ஹேக்கர்களால் தாக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. பறக்கும் டாக்சிகளின் மற்றொரு பெரிய பிரச்சினை செலவு. இது சாத்தியமானால், வானிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
மேலும் படிக்க | இறந்து கரை ஒதுங்கிய 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ