Israel Attack Gaza: இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் 11வது நாளாக தொடர்கிறது. அமெரிக்கா தனது 11 ஆயிரம் வீரர்களை இஸ்ரேலில் நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையின்படி, இந்த அமெரிக்கா வீரர்கள் நேரடியாக போரில் ஈடுபட மாட்டார்கள், ஆனால் இஸ்ரேலிய படைகளுக்கு தொழில்நுட்பம் ஆலோசனை மற்றும் மருத்துவ ஆதரவை வழங்குவார்கள். இதற்கிடையில், அமெரிக்க இராணுவத் தளபதி மைக்கேல் எரிக் குரிலா செவ்வாய்க்கிழமை இஸ்ரேலை அடைந்தார். அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான அவுட்லைனை இவர்கள் இறுதி செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
ஈரான் கடும் எச்சரிக்கை
மறுபுறம் இஸ்ரேலுக்கும் அதற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் காசா மீது குண்டு வீசுவதை நிறுத்தாவிட்டால், உலக முஸ்லிம் படைகளை தடுக்க முடியாது என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். போர் தீவிரமடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளையும் ரஷ்யா எடுத்து வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
காசா மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வரும் இஸ்ரேல்
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமால் தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து, இஸ்ரேலியப் படைகள் காசா மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா ஆகிய இடங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் குழந்தைகள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் போரில் இதுவரை இஸ்ரேலைச் சேர்ந்த 1400 பேரும், காசாவில் இருந்து 2808 பேரும், மேற்குக் கரையைச் சேர்ந்த 57 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இஸ்ரேல்- பாலஸ்தீன் போர் 11வது நாள்: இறந்தவர்களின் விவரம்
பாலஸ்தீனம் சுகாதார அமைச்சகம் தரவுகளின் படி 1030 குழந்தைகள் உட்பட 2808 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அதேபோல இஸ்ரேல் தரப்பில் இருந்து கிடைத்த தகவலின் படி, இதுவரை இஸ்ரேலியர்கள் 1400 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
250 பேர் சிறைப் பிடிக்கப்பட்டு உள்ளதாக ஹமாஸ் அறிவிப்பு
200 முதல் 250 பொதுமக்கள் சிறைப் பிடிக்கப்பட்டதாக ஹமாஸ் ராணுவ செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா தெரிவித்துள்ளார். இதில் வெளிநாட்டை சேர்ந்த குடிமக்கள் எங்கள் விருந்தினர்கள் என்றும் நிலைமை சீரானதும் அவர்களை விடுவிப்போம் எனக் கூறியுள்ளார். காசா மீது இஸ்ரேல் தரைப்படை தாக்குதல் நடத்தும் என்ற அறிவிப்புக்கு நாங்கள் பயப்படவில்லை என்றும் ஒபேதா கூறினார். 10 ஆயிரம் வீரர்களுடன் காசாவில் தரைப்படை தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் செல்லும் அமெரிக்கா அதிபர் ஜோ பிடன்
இஸ்ரேல் ராணுவம் தரைப்படை தாக்குதல் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து, அரசிடம் இருந்து கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பிடன் அக்டோபர் 18 ஆம் தேதி இஸ்ரேலுக்குச் செல்வார் என்று அறிவித்தார். பிரதமர் நெதன்யாகு மற்றும் அதிகாரிகளுடன் 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
காசா மீது தரைப்படை தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு
நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, அதிபர் ஜோ பிடனின் வருகையால் காசாவில் இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தாமதமாகலாம். அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து குண்டுவீசி பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் தளபதிகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றால் காசாவிற்குள் நுழைந்து தரைப்படை தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க - Israel Hamas Conflict: விடிய விடிய தாக்குதல்.. பெண்கள், குழந்தை கொல்லப்பட்டுள்ளனர்
இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவோம் -பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கியது. சில நிமிடங்களுக்குப் பிறகு, எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியதை அடுத்து பிரதமர் மற்றும் அனைத்து எம்.பி.க்களும் பதுங்கு குழி அறைகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து, அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியது. அப்பொழுது பிரதமர் நெதன்யாகு உரையாற்றினார். அதில், "நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் இன்றும் நாம் சுதந்திரப் போரில் போராடுவது போல் தெரிகிறது. இது நமது இருப்புக்கான யுத்தம், இதில் வெற்றி பெறுவோம் என்பதை நாட்டுக்கு கூற விரும்புகிறேன்" என்றார்.
நாம் தவறு செய்துவிட்டோம் என்பதில் சந்தேகமில்லை -நெதன்யாகு
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசிய அவர், ஒரு முக்கிய வாக்குமூலம் அளித்தார். அதாவது "நாம் தவறு செய்துவிட்டோம் என்பதில் சந்தேகமில்லை. நமது தவறுகளால் தான் ஹமாஸ் அக்டோபர் 7 தாக்குதலை நடத்த முடிந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஹமாஸ் உலகிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. இப்போது ஹிஸ்புல்லாவும் ஈரானின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்துகிறது. அனைவருக்கும் நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன், மீண்டும் தவறு செய்ய வேண்டாம். அது மிகவும் ஆபத்தான விளைவுகளாக இருக்கும்" என்றார்.
வளைகுடா நாடுகளின் முக்கிய சந்திப்பு
வளைகுடா நாடுகளின் அமைப்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) முக்கிய கூட்டம் மஸ்கட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஓமன் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
காசாவுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி கிடைக்காது -இஸ்ரேல்
இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் காட்ஸ் நேற்று (திங்கள்கிழமை) கூறுகையில், ஐ.நா. நமது நாடு தாக்கப்பட்டதையும் பார்க்க வேண்டும். காசாவிற்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களைக் கூட ஹமாஸ் திருடுகிறது. எனவே, இப்போது அங்கு எந்த உதவியும் நிவாரணப் பொருட்களும் வழங்கப்படாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார்.
மேலும் படிக்க - இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல்: 2,100 பேர் பலி, ஒரே இரவில் 200 ஹமாஸ் இலக்குகள் அழிப்பு
போரின் முக்கியமான அப்டேட்ஸ்
-- ஹமாஸ் அமைப்பு எரிபொருள், மருந்து மற்றும் பிற பொருட்களை திருடியதாக ஐநா அகதிகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
-- இஸ்ரேல் அமெரிக்காவிடம் 10 பில்லியன் டாலர் உதவி கேட்டுள்ளது.
-- காசா மக்களுக்கு உதவுவதற்காக அனுமதி கேட்டு காசா-எகிப்து எல்லையில் உதவிப் பொருட்கள் நிரப்பப்பட்ட 100 டிரக்குகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
-- காசாவில் இருந்து ஹமாஸ் அகற்றப்படும் வரை அங்கு தாக்குதல்கள் நிறுத்தப்படாது என இஸ்ரேல் அரசு திட்டவட்டம்
-- போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
-- காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் காணவில்லை. அவர்களில் பலர் இடிபாடுகளுக்குள் புதையுண்டு இருக்கலாம் என அச்சம்.
-- காசாவில் இருந்து பாலஸ்தீன் மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் இஸ்ரேல் உள்ளது
-- காசா மக்கள் வெளியேற்றப்பட்டால், அதன் பிறகு அவர்கள் எங்கே தஞ்சம் அடைவார்கள் என்பது பலரின் கேள்வி.
-- அக்டோபர் 15 அன்று, எகிப்து காசா மக்களை அதன் சினாய் பாலைவனத்தில் தங்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியது.
-- ஐ.நா.வின் முன் உள்ள மிகப் பெரிய பிரச்சனை இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுதான்
-- இஸ்ரேல் எந்த நேரத்திலும் காசாவில் தரைவழி தாக்குதல் ஆரம்பிக்கலாம்
இரண்டு பிரிவுகளாக நிற்கும் உலக நாடுகள்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் காரணமாக உலக நாடுகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளது. அரபு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளும் ஹமாஸுடன் நிற்கின்றன. இந்தியா, அமெரிக்கா, யூரோப் போன்ற நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன.
இஸ்ரேல் நாடு எப்பொழு உருவாக்கப்பட்டது?
1947 இல் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பிரிவினையை முன்மொழிந்தது. இதில் மும்முனைப் பிரிவு குறித்து திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது ஜெருசலேமை சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதேசமயம், யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் தனி நாடுகளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. இம்முறையும் யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் அரபுத் தலைவர்கள் அதை எதிர்த்தனர். 1948ல் மே 14 அன்று இஸ்ரேல் நாடு (State of Israel Declare) உருவாக்கப்பட்டது.
மேலும் படிக்க - இஸ்ரேல்- பாலஸ்தீனம் போரை நிறுத்த ரஷ்யா அழைப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ