COP கூட்டங்கள் என்றால் என்ன, அவை எதற்காக?
2022-ம் ஆண்டுக்கான ஐநா பருவநிலை மாநாடு எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு, 27-வது மாநாடு ஆகும். காலநிலை மாற்றத்தின் அபாயங்களை உணர்ந்த பின்னர், உலக நாடுகள் 1992-ம் ஆண்டு முதன்முதலாக UNFCCC எனப்படும் ஐநா பருவநிலை மாற்ற பணித்திட்டப் பேரவையை உருவாக்கின. இந்தப் பணித்திட்டத்தில் உள்ள 197 நாடுகளும் 1995-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கூடி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து விவாதித்து வருகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாடு, Conference of Parties என அழைக்கப்படுகிறது. 1995-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற முதலாம் COP-யில் இருந்து கடந்த ஆண்டு Glasgow-வில் நடைபெற்ற COP வரை இதுவரை 26 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தற்போது 27-வது மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் எகிப்தில் குவிந்துள்ளனர்.
COP26 இல் என்ன நடந்தது?
புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்ஸியசிற்குள் கட்டுப்படுத்துவதற்காக, 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யமாக்க இந்த மாநாட்டில் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கான ஒப்பந்தத்தில் கார்பன் வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும் என்ற சொல், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என மாற்றப்பட்டது. அந்த வகையில் COP 26 ஏமாற்றத்தைத்தான் அளித்தது. மேலும் பருவநிலை மாற்றத்தினால் ஏழை நாடுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் படிக்க | COP 27: பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் Coca-Cola & PepsiCo!
COP 27இலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
கார்பன் உமிழ்வுவைக் குறைப்பது குறித்தும், காலநிலை மாற்றத்தால் தெற்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு அளிப்பது குறித்தும், இந்த ஆண்டு மாநாட்டில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த மாநாடு ஆப்பிரிக்க COP என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில், பருவநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் கண்டமாய் ஆப்பிரிக்க கண்டம் உள்ளது. எனவே, ஆப்பிரிக்க கண்டத்தை முன்வைத்து பல தீர்மானங்கள் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முரண் என்னவென்றால், ஆப்பிரிக்க நாடுகளால் வெளியாகும் கார்பன் உமிழ்வு மிகக்குறைவே.
புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியசிற்குள் குறைக்க, 2010-ம் ஆண்டின்போது இருந்த கார்பன் உமிழ்வை, 2030-ம் ஆண்டுக்குள் 45 சதவீதம் குறைக்க வேண்டுமென முந்தைய மாநாடுகளில் முடிவெடுக்கப்பட்டபோதும், எதார்த்தம் என்னவோ அதற்கு நேர்மாறாக உள்ளது. திட்டமிட்ட அளவை எட்டுவதில் குறைபாடு இருந்தால் கூட பரவாயில்லை. அதற்கு முரணாக, 2030-ம் ஆண்டின் கார்பன் உமிழ்வு, 2010-ம் ஆண்டை விட அதிகமாக இருக்கும் என ஐநா கணித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போரின் தாக்கம்
ஐரோப்பிய நாடுகள் புதை படிவ எரிபொருட்களைச் சார்ந்திருந்ததன் விளைவுகளை, உக்ரைன் போர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் தேவையை ரஷ்யாவிடம் இறக்குமதி செய்தே பூர்த்தி செய்த நிலையில், உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் கடுமையாக உயர்ந்தன. இந்த விலை உயர்வு பிற பொருட்களின் விலையிலும் எதிரொலித்தது. எரிபொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் ஐரோப்பிய நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் பங்கு
2009-ம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற 15-வது COP-யில், 2020-ம் ஆண்டு வரை, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்ய வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் தர வளர்ந்த நாடுகள் உறுதியளித்தன. ஆனால் UNFCCC அறிக்கையின்படி, 2017-ம் ஆண்டு 45.4 பில்லியன் டாலர்கள், 2018-ம் ஆண்டு 51.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே வளர்ந்த நாடுகள் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென இந்தியா இந்த மாநாட்டில் அழுத்தமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இழப்புகளைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும், வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப உதவி அளிக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஒத்துழைப்பு சாத்தியமா?
ஒவ்வொரு முறை COP தொடங்கும்போதும் நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனுமே தொடங்கப்படுகிறது. ஆனால், கடைசியில் முடியும்போது ஏமாற்றமே மிஞ்சுகின்றன. ஒருவேளை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நம்பிக்கை அளித்தாலும் அவை செயல்பாட்டில் எதிரொலிக்கிறதா என்றால் கேள்விக்குறியே. 2015-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற மாநாடே அதற்கு மிகச்சிறந்த உதாரணம். இந்த மாநாட்டின் முடிவுகள் எப்படி இருந்தாலும் பருவநிலை மாற்றத்தால் விளையக்கூடிய அபாயங்களையும், சூழலியலிலும், சமூக ரீதியாகவும் விளையக்கூடிய அபாயங்களை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு அறிவியல் சமூகத்திற்கு உள்ளது. இன்றைய சூழலில் ஆற்றலின் முக்கிய ஆதாரமான புதைவடிவ எரிபொருள் பயன்பாடைக் கைவிட உலக நாடுகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்பது காலத்திற்கே வெளிச்சம்.
மேலும் படிக்க | World Population: உலக மக்கள்தொகை இன்று 800 கோடியை எட்டியது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ