ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனியை பொன் மழையாக பொழியச் செய்த நாள் தான் 'அட்சய திருதியை' ஆகும்.
கேரளா மாநிலம் காலடி என்னும் ஊரில் சிவகுரு- ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு பிறந்தவர் ஆதிசங்கரர். இவர் சிறு வயதிலேயே குருகுலத்தில் வேதங்களைக் கற்றவர். அந்த காலத்தில் குருகுல வழக்கப்படி யாசகம் எடுத்துதான் உணவு உண்ண வேண்டும். அதன்படி ஆதிசங்கரர் யாசகத்திற்காக புறப்பட்டார். அவர் யாசித்த வீடு ஒரு ஏழையின் வீடு. அந்த வீட்டின் முன்பு நின்று, 'பவதி பிட்சாந்தேஹி' என்று மும்முறை குரல் கொடுத்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த பெண், இந்த ஏழையின் வீட்டில் ஒன்றும் இல்லை என்றார். ஒரே ஒரு காய்ந்த நெல்லிக்கனி மட்டுமே உள்ளது என்றாள். அதைப் பெற்றுக்கொண்ட ஆதிசங்கரர், 'ஏழ்மை நிலையிலும் கூட, தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தானமாக தந்துவிட்ட அந்தப் பெண்ணின் குணத்தை எண்ணி வியந்தார். அந்தப் பெண்ணின் ஏழ்மையை போக்க எண்ணிய ஆதிசங்கரர், அந்த வீட்டின் முன்பு நின்றபடி மகாலட்சுமியை நினைத்து மனமுருக வேண்டினார்.
அப்போது அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள், பொன் மழையாகப் பெய்தன. வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் குவிந்தன. அந்தப் பெண்மணியின் ஏழ்மையை அகற்றிய தினம் 'அட்சய திருதியை' ஆகும்.
அவர் பாடிய பாடல் 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.