சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்: தில்லியிலிருந்து படை எடுக்கும் தேசிய தலைவர்கள்

பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார். பல்வெறு இடங்களில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2021, 10:35 AM IST
  • பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார்.
  • மார்ச் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியிலும், தமிழகத்தில் உள்ள தாராபுரம் தொகுதியிலும் பிரசாரம் செய்யவுள்ளார்.
  • ஏப்ரல் 3 ஆம் தேதி அமித்ஷா, ராமநாதபுரம், நெல்லை மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பிரசாரம் செய்வார்.
சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்: தில்லியிலிருந்து படை எடுக்கும் தேசிய தலைவர்கள் title=

தமிழகத்தில் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முழு முனைப்புடன் நடந்து வருகின்றது. மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார். பல்வெறு இடங்களில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார். 

இன்று காலை அவர் திட்டக்குடி தொகுதியிலும் மாலை திருவையாறு தொகுதியிலும் இரவு 7 மணியளவில் துறைமுகம் தொகுதியிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என பாஜக நிர்வாகம் தெரிவித்துள்ளது. துறைமுகத்தில் நட்டா பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் மற்றொரு மாநிலமான கேரளாவிலும் நட்டா பிரச்சாரம் மேற்கொள்வார். அவர் கன்னூரில் கேரள பாஜக தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்த உள்ளார்.

வரும் 27-ந் தேதி (சனிக்கிழமை) மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோவை தெற்கு, துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்யவிருக்கிறார். அதைத் தொடர்ந்து 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியிலும், தமிழகத்தில் உள்ள தாராபுரம் தொகுதியிலும் பிரசாரம் செய்யவுள்ளார். 

ALSO READ: Cook with MLA: சிக்கன் 65 சமைத்து மக்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர்

இது தவிர, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு, விருதுநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்வார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் வேட்பாளர் அண்ணாமலைக்காக பிரசாரம் செய்யவுள்ளார். அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 2 ஆம் தேதி அவர் மதுரையில் நடக்கும் கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதோடு, நாகர்கோவிலிலும் பிரசாரம் செய்வார். 

அதைத் தொடர்ந்து 3 ஆம் தேதி அமித்ஷா, ராமநாதபுரம், நெல்லை மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பிரசாரம் செய்வார் என குறப்பட்டுள்ளது. 

இது தவிர, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 1 ஆம் தேதி திருக்கோவிலூர், கோவை தெற்கு தொகுதிகளிலும், 3 ஆம் தேதி குளச்சல் மற்றும் விருதுநகரிலும் பிரசாரம் செய்வார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மொடக்குறிச்சி (Modakurrichi), காரைக்குடி, விளவங்கோடு சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வார். 

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெறும்.

234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில், காங்கிரஸ்-திமுக கூட்டணியும் பாஜக-அதிமுக கூட்டணியும் மிகப்பெரிய இரு பிரிவுகளாக உள்ளனர். இவர்களைத் தவிர நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க வகையில் மக்கள் அபிமனாத்தைப் பெற்றுள்ளன.

ALSO READ: தேர்தல் ஆணையம் தேர்தலில் நேர்த்தியை உறுதி செய்ய வேண்டும்: HC-யில் திமுக கோரிக்கை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News