தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக-வினர் வெற்றி பெற்றனர். அவர்கள் சபாநாயகர் முன்னிலையில் இன்று பதவி ஏற்கின்றனர்.
தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19 ஆகிய தினங்களில் மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக-வும், 9 இடங்களில் அதிமுக-வும் வெற்றி பெற்றன. இவர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், 28-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதாக சட்டசபை செயலகத்திடம் திமுக தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
அதேவேளையில் இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு அதிமுக, தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை நாளை பதவியேற்க வைக்கின்றது.
அதாவது சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சூலூர், நிலக்கோட்டை, விளாத்திகுளம், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதி உறுப்பினர்கள் நாளை பதவியேற்க உள்ளனர். சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் நடைபெற உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிபிரமாணம் செய்து வைக்க உள்ளார்.