Gujarat Election 2022 Second phase Vidhan Sabha Chunav 2022 Polling Live Updates: குஜராத் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பல தசாப்தங்களுக்குப் பிறகு ஆட்சி அமைக்க முடியுமா என்ற முயற்சியில் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. வலுவான இரும்புக்கோட்டையாக விளங்கும் குஜராத்தை தக்கவைத்துக்கொள்வதில் பாஜக தீவிரமாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில வெற்றி, அதற்கு குஜராத்திலும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. மும்முனைப் போட்டி நிலவும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குபதிவு தொடங்கிவிட்டது.
மாநிலத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையுடன் மத்தியப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 2017 சட்டமன்றத் தேர்தலில், 14 மாவட்டங்களில் உள்ள 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
முன்னதாக, டிசம்பர் 1 ஆம் தேதி குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டத் தேர்தலில், சுமார் 63.31 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். குஜராத் சட்டப் பேரவையில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன, டிசம்பர் 1 ஆம் தேதி சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள 89 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்டத் தேர்தலில், அகமதாபாத், காந்திநகர், மெஹ்சானா, படான், பனஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவலி, மஹிசாகர், பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, ஆனந்த், கெடா மற்றும் சோட்டா உதய்பூர் மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றையத் தேர்தல் வாக்குப்பதிவில் கட்லோடியா, விராம்கம் மற்றும் காந்திநகர் தெற்கு தொகுதிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.