தொப்பை என்னும் தொந்தி படுத்தும் பாடு பெரும்பாடு.. இதற்கான 5 காரணங்கள்...

பிள்ளையாருக்கு தொந்தி இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நம்மால், நம் பிள்ளைகளுக்கு தொப்பை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுதான் பக்திக்கும் உள்ள வித்தியாசமோ? சரி தொப்பை விழுவதற்கு, மன்னிக்கவும் வளர்வதற்கு சிலபல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐந்து காரணங்களை தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 16, 2020, 01:38 AM IST
  • வயிற்றில் டயர் டயராக சதை சேர 5 காரணங்கள்
  • தூக்கமின்மை
  • வயது முதிர்வு
  • ஆரோய்க்கியமற்ற உணவுகள்
  • மன அழுத்தம்
  • உடற்பயிற்சியை தவிர்ப்பது
தொப்பை என்னும் தொந்தி படுத்தும் பாடு பெரும்பாடு.. இதற்கான 5 காரணங்கள்... title=

தொந்தி, தொப்பை என்பது அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒன்று தான். மனிதர்களுக்கு மட்டுமா தொப்பை, கடவுள்களுக்கும் தொப்பை இருக்கிறது.  கனநாயகனான கணபதியே தொப்பையின் முழு முதல் கடவுள்... அவரை செல்லமாக தொந்தி விநாயகர் என்றும் அழைப்பார்கள்.
பிள்ளையாருக்கு தொந்தி இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நம்மால், நம் பிள்ளைகளுக்கு தொப்பை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுதான் பக்திக்கும் உள்ள வித்தியாசமோ? சரி தொப்பை விழுவதற்கு, மன்னிக்கவும் வளர்வதற்கு சிலபல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐந்து காரணங்களை தெரிந்துக் கொள்வோம்...

ஆரோக்கியமற்ற உணவுகள்
கொழுப்பு வகை உணவுகள், அதாவது உடலின் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் வறுத்த உணவுகள், சீஸ் கேக், பர்கர், பட்டர் பாப்கான், சமோசா, இனிப்புகள் என பல பண்டங்களை தின்று தொப்பையை வளர்க்கிறோம். ஆரோக்கியமற்ற இந்த உணவுகளை குறைத்தால், தொப்பை போயே போச்சு என்று ஒரே நாளில் கரையா விட்டாலும், எறும்பு ஊற கல்லும் தேயும் என்ற முதுமொழிக்கு ஏற்ப நாம் முதுமையடைவதற்கு முன்னதாக போய்விடும். ஆரோக்கியமற்ற உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடையாது. இதுபோன்ற உணவுகளை தொடர்ந்து உண்டால், குண்டாவது நிச்சயம். Fast foods எனப்படும் துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், துரிதமாக தொப்பையும் வளர்ந்துவிடும். இது உடலின் நடுப்பகுதியான இடுப்பின் அளவை பெரிதாக்குகிறது.  இஞ்சி இடுப்பழகியாக இல்லாவிட்டாலும், தொப்பை இல்லாத இயல்பான உடலையாவது பெற வேண்டுமானால், Fast foodகளை துரிதமாக ஒதுக்கிவிடவும்.

உடற்பயிற்சி  
உடற்பயிற்சி என்றால், சிலர் வாயில் அடைபோடுவதையும் உடற்பயிற்சியாக நினைத்து விடுகிறார்களோ என்ற சந்தேகம், பெரிய தொப்பைக்காரர்களை பார்த்தால் வருவதை தவிர்க்க முடியவில்லை. உடற்பயிற்சி என்றால் உடலின் உறுப்புகள் அனைத்திற்கும் புத்துணர்சிக் கொடுக்கும், உடலின் இயக்கத்தை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை செய்யவேண்டும். யோகா, ஜாகிங் போன்ற பயிற்சிகளை செய்வதால், உடலும் வலுப்படும், ஆரோக்கியமும் உறுதியாகும். தொப்பையில்லா, தட்டையான வயிற்றை பெறலாம். உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் உள்ள தசைகள் வலு பெறும், கொழுப்புகள் எரிபொருளாக செயல்பட்டு கரைந்துவிடும். உடற்பயிற்சி செய்யும்போது, தசைகளிலுள்ள கொழுப்புகள் மட்டுமே குறையும் என்பதால் கட்டுக்கோப்பான உடல்வாகைப் பெறலாம். கட்டுக்கோப்பான உடல் வேண்டுமானால், உடற்பயிற்சியும் வாய் கட்டுப்பாடும் அவசியம்.  

மன அழுத்தம்
பரபரப்பான வாழ்க்கை சூழலில் வாழும் இன்றைய காலத்த்டில், வேலை பளு, பொறுப்புகள், அழுத்தம் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. உடல் எடை அதிகரிக்கவும், தொப்பை வருவதற்க்கும் முக்கிய காரணம். மன அழுத்தம் ஆகும். மன அழுத்தம் ஏற்பட்டால், உடலில் சுரக்கும் வேதிப்பொருட்கள், உடல் இயக்கத்துக்கு தேவையானதை விட அதிகமான சர்க்கரையை கல்லீரலில் இருந்து வெளியேற்றுகிறது. எனவே உடல் எடை கூடுகிறது. உடல் எடை அதிகரிக்கும்போது, பொதுவாகவே முதலின் அதன் தாக்கம் உடலின் நடுப்பகுதியான வயிற்றில் எதிரொலிக்கும். அந்த எதிரொலிப்பு தொப்பையாக வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. எனவே மனதில் அழுத்தம் இல்லாமல், இயல்பாக இருந்தால், தொப்பை பெருகாது.

தூக்கமின்மை
குறைவான தூக்கமும், முறையற்ற தூக்கமும் வயிற்று பகுதியில் கொழுப்பு சேர காரணமாகி துக்கத்தை அதிகரிக்கும், அதனால் மேலும் தூக்கம் குறையும். ஆறு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு உடலின் வடிவம் மாறும் அபாயம் அதிகரிக்கிறது. தூக்கம் குறைந்தால் உடல் எடை அதிகரிக்கும், உடல் எடை அதிகரிப்பின் முதல் இலக்கு வயிறு தான்.. வயிறில் ஏறும் எடை தொப்பையாக உருமாறுகிறது.

வயது முதிர்வு
என்றும் 16 என்று சொல்லிக் கொள்ள அனைவருக்கும் ஆசை தான் என்றாலும், வயது அதிகரிப்பது என்பது இயல்பானது. வயது முதிரும்போது, இயல்பாக மாறும் உடலில் வளர்சிதை மாற்றங்களால், உடலில் கொழுப்பு சேர்ந்து, உடல் எடை கூடும்.  உடலின் உறுப்புகளில் சேரும் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் தான் அதிகம் படிகிறது. படியும் கொழுப்பு படிமானமாகி, தொப்பையாக உருமாறி நம்மை கவலைக்குள்ளாக்குகிறது.  

Read Also | கோவிட் -19 அதிகம் பாதிக்காத blood group எந்த குரூப்? அது உங்களுடையதா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News