திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது 'நிபா' வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது.கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு 'நிபா' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது இந்நோய்க்கு 17 பேர் பலியானார்கள்.பின்னர் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்தது.
2 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் மீண்டும் 'நிபா' வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி பரிதாபமாக இறந்தான். இதையடுத்து 'நிபா' வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த அவனது பெற்றோர், உறவினர்கள், சிகிச்சை அளித்த சுகாதார பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. முதற்கட்டமாக சிறுவனுடன் நேரடி தொடர்பில் இருந்த 257 பேர் கண்டறியப்பட்டனர்.
அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 10 பேரின் ஆய்வு முடிவுகள் நேற்று வந்தன. அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதற்கிடையே 'நிபா' வைரஸ் அறிகுறி இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்களில் 51 பேர் பலியான சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனி வார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 17 பேருக்கு லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. 'நிபா' வைரஸ் பாதிப்பால் இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தோர் சிலர் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து மலப்புரம், பாலக்காடு, கண்ணூர், வயநாடு, எர்ணாகுளம், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கும் சென்றது தெரியவந்துள்ளது. எனவே இந்த மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். இதில் 35 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரியவந்ததும், மத்திய நோய் தடுப்பு குழுவினர் கோழிக்கோடு சென்று சோதனை மேற்கொண்டனர். 'நிபா' வைரஸ் பரவலுக்கு காரணமான பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்தும் ஆய்வு செய்தனர். இதில் கண்டறியப்பட்ட தகவல்கள் மத்திய சுகாதார துறைக்கு அறிக்கையாக அளித்தனர். அதனடிப்படையில் கேரளாவில் கால்நடை துறையினர் கோழிக்கோடு சென்று கால்நடைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். 'நிபா' வைரஸ் பரவலுக்கு காரணமாக கூறப்படும் வௌவால்கள் கடித்த பழங்களையும் கைப்பற்றி அவற்றை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். குறிப்பாக ரம்பூட்டன் பழங்கள், ஆடுகளின் உமிழ்நீர், காட்டு பன்றிகளின் எச்சம் ஆகியவற்றையும் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
இதற்கிடையே போபாலில் இருந்து நோய் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் இன்று கேரளா வருகிறார்கள். இதுபற்றி கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, "கேரளாவில் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் காய்ச்சல் அறிகுறியுடன் இருப்போர் அந்த தகவலை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். மேலும் காட்டு பகுதியில் பறவைகள் கடித்து போடும் பழங்களை யாரும் எடுத்து உண்ண வேண்டாம்".என்று அவர் கூறினார்.
ALSO READ நிபா வைரஸால் இறந்த சிறுவன்! ரம்புட்டான் பழம் சாப்பிட்டது தான் காரணமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR