ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு நிவாரணமாக $417 மில்லியன் வழங்க உத்தரவிட்டுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
முகப்பவுடர் உட்பட குழந்தைகளுக்கான பல உடல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம், ஜான்சன் அண்ட் ஜான்சன். இந்நிறுவனத்தின், ‘பேபி பவுடர்’ உள்ளிட்ட தயாரிப்புகளில் கலந்துள்ள சில ரசாயனங்களால், புற்றுநோய் ஏற்படுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் ஈவா எக்கேவர்ரியா ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்ப்பப்பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளாக மரணபடுக்கையில் படுத்துள்ள ஈவா, தன்னுடைய சிறு வயது முதலே ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயனபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளத்தை அந்நிறுவம் முன்னெச்சரிக்கையாக அறிவிப்பதை தவிர்த்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத்தொகையாக $417 மில்லியன் வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினுடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்புகளும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.