இறுதி வேட்பாளர்கள் பட்டியல்: மக்களவையில் 845 பேர், இடைத்தேர்தலில் 269 பேர் போட்டி

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2019, 06:50 PM IST
இறுதி வேட்பாளர்கள் பட்டியல்: மக்களவையில் 845 பேர், இடைத்தேர்தலில் 269 பேர் போட்டி title=

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐ.ஜே.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர். 
 
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட 2083 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். தென் சென்னை தொகுதியில் மட்டும் 69 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.  
 
இந்நிலையில் இன்று 3 மணிக்கு வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான காலக்கெடு முடிந்தது. வேட்புமனு திரும்பப் பெறுவது நேரம் முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
 
அதில் தமிழக மக்களவைத் தொகுதிகளில் 845 பேர் போட்டியிடுகின்றனர். 18 தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர்.

Trending News