கர்தார்பூர் வழிதடம் வழியாக நாள் ஒன்றுக்கு 5000 யாத்திரிகர்களை அனுமதிக்க பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது!
கர்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் உயர்நிலை குழு இடையே ஞாயிறு அன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் கர்தார்பூர் வழிதடம் வழியாக நாள் ஒன்றுக்கு 5000 யாத்திரிகர்களை அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது நினைவாக, அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா அமைக்கப்பட்டது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் சென்று வர கர்தார்பூர் வழிதடம் அமைப்பது என இருநாடுகளுக்கும் இடையே ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் பகுதியிலுள்ள குருத்வாராவையும், கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
குரு நானக் தேவின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதே மாதத்தில் கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன.
கர்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பாக, இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே கடந்த மார்ச் மாதத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா முன்வைத்த பல கோரிக்கைகளை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், கர்தார்பூர் வழிதடம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் எல்லையான வாகாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது கர்தார்பூர் வழிதடம் வழியாக நாள் ஒன்றுக்கு 5000 யாத்திரிகர்களை அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது.
மேலும் விழாக் காலங்களில் 10,000 யாத்திரிகர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. யாத்திரிகர்கள் தனிநபராகவோ, 15 பேர் வரை கொண்ட குழுக்களாகவோ பயணிக்கலாம் எனவும் ஒப்பந்தமானதாகவும் தெரிகிறது.