இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாக்கிஸ்தான் பிரதமர் போல் செயல்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்!
ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ், ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஆந்திர பவனில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி,.. "ஆந்திர மக்களுக்கும், மாநிலத்துக்கும் ஆதரவாக தான் இருப்பேன் எனவும், ஆந்திர மக்களிடம் இருந்து பணத்தைத் திருடி, பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டார்" எனவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில்., "பிரதமர் மோடி, பாஜக-வுக்கு மட்டும் பிரதமர் அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர் தான் பிரதமர். ஆனால் அந்த எண்ணம் துளியும் இல்லாமல் அவர் மாநில அரசுகள் மீது காழ்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்.
மேற்குவங்கம், டெல்லி, ஆந்திரா என எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுப்பதையும், அந்த மாநிலங்களை புறக்கணிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கு பிரதமர் போல செயல்படுவதற்கு மாறாக பாகிஸ்தான் பிரதமர் போன்று செயல்படுகிறார்" என குற்றம்சாட்டினார்.