மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் மாவட்ட மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 6 நிமிடத்திலேயே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:03 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பாவ்னா சந்தோஷ் ஜாதவ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு ஆதார் எண் கேட்டு பெற்றோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்த அடுத்த 6 நிமிடத்தில் அதாவது 12.09 மணியளவில் குழந்தைக்கான ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
"உஸ்மானாபாத்திற்கு இது பெருமை தரும் சம்பவம், இந்த குழந்தைக்கு ஆதார் எண் வழங்கியது போல மாவட்டத்தில் அனைத்து குழந்தைக்கும் ஆதார் எண் வழங்கப்படும்" என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் தாயும் குழந்தையும் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உஸ்மானாபாத் மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ ஆயிரத்து 300 குழந்தைகள் ஆதார் எண் பெற்றுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.