கர்நாடகா சட்டமன்ற சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் தானாக முன்வந்து பதவி விலகாத பட்சத்தில், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது குறித்து பாஜக ஆலோசித்து வருகிறது!
கர்நாடகாவில் HD குமாரசாமி தலைமையிலான ஆட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு உதவியுடன் கவிழ்க்கப்பட்டதை அடுத்து எடியூரப்பா நான்காவது முறையாக மாநில முதல்வராக நேற்றைய தினர் பதவி ஏற்றார்.
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை எதிர்த்து எம்.எல்.ஏ. பதவியை 15 பேர் ராஜினாமா செய்தது ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து அந்த 15 பேரையும் மீண்டும் தேர்தலில் நிற்க விடாமல் செய்வதற்காக அவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை.
மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். முன்னதாக கடந்த வியாழன் அன்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 3 பேரை கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் சபாநாயகரை பதவியில் இருந்து காலி செய்ய பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். எனவே சபாநாயகர் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்யாத நிலையில், வரும் திங்கட்கிழமை கர்நாடகா சட்டசபை கூடியதும் சபாநாயகர் ரமேஷ் குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார் அடுத்தடுத்து முடிவுகள் எடுக்கும் முன்பு அவரை துரத்தும் வகையில் உடனடியாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வலியுறுத்த உள்ளனர். அவரை பதவியில் இருந்து இறக்கி விட்டு புதிய சபாநாயகரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.