ஏர் இந்தியா பங்குகளை தனியார் மயமாக்கும் திட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நட்டத்தில் இயங்குவதால், அந்நிறுவனத்தின் பங்குகளை தனியார் மயமாக்கும் முடிவில் மத்திய அரசு தொடர்ந்து தீவிர ஆர்வம் காட்டி வருகின்றது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறைக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதால், முந்தைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் சுமார் 76% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது. ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க எந்த ஒரு நிறுவனமும் முன் வரவில்லை. இதன் காரணமாக பங்குகளை தற்காலிகமாக விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது.
இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், 2014-2019 ஆம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட திட்டங்கள், நிலுவையில் உள்ள சட்டங்கள் என அனைத்தையும் மீண்டும் கையில் எடுக்க அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டம் நேற்று டெல்லியில் கூடிய போது, ஏர் இந்தியாவின் முதலீட்டை தனியாருக்கு வழங்கும் முடிவு தொடர்ந்து அப்படியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதத்தில் AISAM என்ற அமைப்பு கூடிய போது., ஏர் இந்தியாவை மீட்பதற்காக அரசு அளித்து வரும் ஆதரவு காரணமாக நிதி நெருக்கடிக்கு ஆளான ஏர் இந்தியாவில் ஓரளவு நிலைமை சீரடைந்திருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டு இருந்தது. எனினும் தற்போது ஏர் இந்தியா பங்குகளை தனியார் மயமாக்கும் திட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.