ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார்!
நேற்று டெல்லி சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச்சீட்டு எந்திரங்களில் 50% கணக்கிட வேண்டும் என்பதை நீதிமன்றத்தில் வலியுறுத்துவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வீட்டுக்கு சென்ற சந்திரபாபு நாயுடு, அங்கு அவர் ராகுலை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
இருவரும் தனி அறையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததாகவும், இந்த சந்திப்பின் போது வேறு யாரும் உடன் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தலுக்கு பின்பு உருவாக்கப்பட வேண்டிய கூட்டணி பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
மேலும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மாநில கட்சி தலைவர்களை சந்தித்து வருவதை பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இதன் பின்னர் சந்திரபாபு நாயுடு திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மேற்கு வங்க மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.