காஷ்மீர் விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தை பாகிஸ்தானுடன் மட்டும்தான் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்!
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையில் இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதற்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டபின் பின் வாங்கிய அமெரிக்க அரசு, இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை என்று கூறி நிறுத்திக்கொண்டது.
எனினும், காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவை. அதை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி சர்ச்சையினை உண்டாக்கினார்.
இதனிடையே நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப்., இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கேட்டுக்கொண்டால் இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக இருக்கும் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண்பேன்" என மீண்டும் காஷ்மீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார்.
Have conveyed to American counterpart @SecPompeo this morning in clear terms that any discussion on Kashmir, if at all warranted, will only be with Pakistan and only bilaterally.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 2, 2019
இந்நிலையில் தற்போது தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் 9-வது கிழக்கு ஆசிய நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிலும், 26-வது ஏசியான் பிராந்திய கூட்டமைப்பு மற்றும் 10-வது மேகாங் கங்கா கூட்டுறவு மாநாட்டிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சு நடத்துவோம், இருநாடுகள் மட்டுமே பேச்சுவார்த்தையில் இருக்கும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து அதிபர் ட்ரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "பல்வேறு பிராந்திய விஷயங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடன் பேச்சு நடத்தினேன். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று காலை தெளிவாகக் கூறிவிட்டேன். காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் மட்டும்தான் பேச்சு நடத்துவோம். இரு தரப்பு நாடுகள் மட்டுமே பேச்சுவார்தையில் பங்கேற்கும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.