தீபாவளி அன்று புதுடெல்லியில் தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன் குறைந்தது ஐந்து பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுதுத பயங்கரவாதிகளுக்கு இடையிலான உரையாடலை புலனாய்வு அமைப்புகள் தடுத்து நிறுத்தியுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, இந்த சதி திட்டமானது, அவர்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள பெரிய திட்டம் என தெரியவந்துள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த அவர்களது ஆட்களில் சிலர் டெல்லியில் தங்கள் கூட்டளிகளை இதுதொடர்பாக சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
புலனாய்வு துறை தகவல் படி, இறுதியாக அவர்கள் கோரக்பூருக்கு அருகிலுள்ள இந்தோ-நேபாள எல்லைக்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உளவுத்துறை உள்ளீட்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள பல பாதுகாப்பு தளங்களும் ஆரஞ்சு எச்சரிக்கையில் வைக்கப்பட்டன.
இதுகுறித்து அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கையில்., "பஞ்சாப், ஜம்மு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாப்பு தளங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. இந்திய விமானப்படை பஞ்சாபில் பதான்கோட் மற்றும் ஜம்மு உள்ளிட்ட விமான தளங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-வது பிரிவை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5 முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பாதுகாப்பு தளங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று உளவுத்துறை தெரிவித்து வருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக் கோட்டிலும், சர்வதேச எல்லையிலும் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக பண்டிகை காலங்களில் ஒரு பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்து இக்குழுக்கள் திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.